
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 33 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து விளையாடுவது குறித்து ஒரு சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
பஞ்சாப் அணியில் இணைந்த முதல் வருடத்தை தவிர மற்ற அனைத்து வருடங்களிலும் நான் தான் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில், பஞ்சாப் அணியில் இணைந்த முதல் ஆண்டுக்கு பிறகு, இரண்டாம் ஆண்டிலிருந்து நான் சீனியாரிட்டியை உணர ஆரம்பித்தேன். எனவே, ஒவ்வொரு ஆண்டும் நான் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருவதால் எந்த ஒரு வேளையிலும் நான் தவறு செய்ய முடியாது.
ஏனெனில், அணியின் முக்கிய வீரராக இருக்கும் நானே தவறு செய்தால் அது அணிக்கு மேலும் சிக்கலை தரும். எனவே ஒரு மூத்த வீரர் என்ற வகையில் நான் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று என்னுடைய முழு உழைப்பையும் வெளிப்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.