
புதுடெல்லி,
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், 5 மனுக்களை மட்டுமே மே 5-ந்தேதி இடைக்கால உத்தரவுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் மத்திய அரசு 1,332 பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இச்சட்டத்துக்கு முழுமையாக இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்றும், எதிர்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து, சையது அலி அக்பர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சையது அலி அக்பரின் வக்கீல் ஆஜராகி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "நீங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். நூற்றுக்கணக்கான மனுக்களை ஏற்க முடியாது. 5 மனுக்களை மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கடந்த 17-ந் தேதி நாங்கள் உத்தரவு பிறப்பித்தோம். எனவே, நீங்கள் விரும்பினால், அந்த 5 மனுக்களுக்கு இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்" என்று கூறினர்.