
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (15-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. இடையில் வந்த வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.
கூட்டம் நடைபெற்ற ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 2, 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
அந்த வகையில், மொத்தம் 55 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. நிறைவாக, நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. குறிப்பாக, இந்த விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அவரது குற்றச்சாட்டுக்கு உடனுக்குடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதனால், சட்டசபையில் அனல் பறந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
பின்னர், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கடந்த ஒன்றரை மாத காலத்தில் 30 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அடுத்து, அக்டோபர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்தக் கூட்டம் சுமார் 3 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் அத்துடன் நிறைவடையும்.