வக்பு சட்டத்தில் திருத்தம் மக்களை பிளவுபடுத்தும் பாஜ-ஆர்எஸ்எஸ்சின் சதி: கார்கே கடும் தாக்கு

2 hours ago 1

பக்சர்: ‘வக்பு சட்டத்தில் திருத்தம் செய்தது மக்களை பிளவுபடுத்தும் பாஜ-ஆர்எஸ்எஸ்சின் சதி’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். பீகார் மாநிலம் பக்சரில் அரசியல் சாசன பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது: சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்க வைத்து காங்கிரசை மிரட்ட மோடி அரசு முயற்சிக்கிறது.

நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். தலைவணங்க மாட்டோம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களின் குரலை வலுப்படுத்த சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டுகளாக உழைத்தனர். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கட்சியின் முதுகெலும்பாக இருப்பதால் குறிவைக்கப்படுகிறார்கள்.

வக்பு சட்டத்தில் செய்த திருத்தம், சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்க பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சின் சதி. பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் பாஜவுக்கும் இடையிலான கூட்டணி சந்தர்ப்பவாதமானது. நிதிஷ் குமார் முதல்வர் பதவிக்காக மட்டுமே அடிக்கடி அணி மாறுகிறார். கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி பீகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி தொகுப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதி என்ன ஆனது. பிரதமர் பொய்களின் தொழிற்சாலையை நடத்துகிறார். இவ்வாறு கார்கே கூறினார்.

The post வக்பு சட்டத்தில் திருத்தம் மக்களை பிளவுபடுத்தும் பாஜ-ஆர்எஸ்எஸ்சின் சதி: கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article