வக்பு சட்ட திருத்தம் பற்றி விவாதிக்க காஷ்மீர் சபாநாயகர் அனுமதி மறுப்பு: கூச்சல் அமளியால் பேரவை ஒத்தி வைப்பு

6 hours ago 2

ஜம்மு:வக்பு சட்ட திருத்தம் பற்றி விவாதிக்க காஷ்மீர் பேரவை சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பேரவையில் கடும் கூச்சல் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் நடந்து வருகிறது. இதில்,சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றுகூறி தேசிய மாநாட்டுகட்சி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 9 பேர் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அவை தலைவர் அப்துல் ரகீம் ராதர் நிராகரித்தார்.

உறுப்பினர்களின் நோட்டீசுக்கு பதில் அளித்த சபாநாயகர் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர்,“விதி 56 மற்றும் விதி 58 துணை விதி 7-ன் படி நீதிமன்ற விசாரணையில் உள்ள எந்த ஒரு விஷயம் குறித்தும் விவாதிக்க அவையை ஒத்திவைக்க முடியாது. இந்த பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.அதன் நகல் என்னிடம் இருக்கிறது. எனவே, ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் விவாதிக்க முடியாது என்று விதி தெளிவாகக் கூறுகிறது” என தெரிவித்தார்.

பிடிபி கட்சி உறுப்பினர் வாகித் பாரா பேசுகையில்,இது மதம் சம்மந்தமானது.தமிழ்நாடு சட்டபேரவையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காஷ்மீர் பேரவையிலும் இதே போன்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். சபாநாயகர் கூறுகையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னர் தமிழ்நாடு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே நீதிமன்றத்தில் இருக்கும் இந்த பிரச்னை பற்றி விவாதிக்க முடியாது என்றார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், கேள்வி நேரத் தாள்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பியவந்த நிலையில் அதற்கு பதிலடியாக பாஜ உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

The post வக்பு சட்ட திருத்தம் பற்றி விவாதிக்க காஷ்மீர் சபாநாயகர் அனுமதி மறுப்பு: கூச்சல் அமளியால் பேரவை ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article