
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது. ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல். 232 பேர் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தது சாதாரணமானது அல்ல. பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்றியது அரசமைப்பு மீதான தாக்குதல்.
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைக்காக தமிழ்நாடு என்றும் போராடும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.