
திருப்பூர்,
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு கணித ஆசிரியராக புதுக்கோட்டையை சேர்ந்த சுந்தரவடிவேலு (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது அநாகரிகமாக மாணவிகளிடம் நடந்து கொண்டதாக கூறி, மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சைல்டுலைன் அமைப்புக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு நேற்று முன்தினம் வந்து முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலைக்கல்வி) காளியப்பன் மற்றும் தெற்கு போலீசார் வந்து மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் எழுத்துப்பூர்வமாக புகாரை பெற்று கே.வி.ஆர்.நகர் மகளிர் போலீசில் அதிகாரிகள் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர் சுந்தரவடிவேலுவை திருப்பூர் அழைத்து வந்து நேற்று முன் தினம் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு போக்சோ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுந்தரவடிவேலுவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.