பெய்ரூட்: தெற்கு லெபனான் நகரமான கானாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் மேயர் உள்பட 25 பேர் பலியானார்கள். காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இருபகுதிகள் மீதும் விமானப்படை வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து நேற்று அதிகாலை இஸ்ரேல் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு முதல்முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் கானாவில் இஸ்ரேல் படைகளின் பீரங்கி குண்டுகள் விழுந்ததில் கட்டிடம் முழுமையாக இடிந்தன. இதில் இருந்து 20 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் லெபனான் தெற்கு நகரமான நபாட்டியே மீதும் இஸ்ரேல்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் நபாதியே மாகாண மேயர் அஹ்மத் கஹில் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக நபாதியே மாகாணத்தின் கவர்னர் ஹுவைடா டர்க் தெரிவித்தார்.
நபாதியே மாகாணத்தில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் கூட்டம் நடத்திய போது மேயர் அஹ்மத் கஹில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லெபனானின் தற்காலிக பிரதமர் நஜிப் மிகாட்டி தெரிவித்துள்ளார். அங்குள்ள மேயர் கட்டிடத்தில் கூட்டம் நடந்த போது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இதை லெபனான் உள்துறை அமைச்சர் பஸ்சம் மவ்லவி உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேல் நடத்திய இந்த திடீர் தாக்குதல்களால் லெபனானில் 12 லட்சம் பேர் இதுவரை இடம் பெயர்ந்து உள்ளனர். கடந்த அக்டோபரில் இருந்து லெபனானில் சுமார் 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலடியாக ஹிஸ்புல்லா படைகள் தாக்கியதில் இஸ்ரேல் வடக்கு பகுதியில் 60,000 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் இஸ்ரேலில் கிட்டத்தட்ட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக ஹிஸ்புல்லா குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
The post லெபனானில் மீண்டும் தாக்குதல் மேயர் உள்பட 25 பேர் பலி: இஸ்ரேல் அதிரடி appeared first on Dinakaran.