லாவோஸ் பிரதமரை இருதரப்பு கூட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

5 months ago 37

வியன்டியான்,

பிரதமர் மோடி, லாவோஸ் நாட்டின் வியன்டியான் தலைநகரில் விமானத்தில் சென்றிறங்கியதும், அவரை அந்நாட்டு உள்துறை மந்திரி விளாய்வாங் பவுத்தகம் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாரம்பரிய ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பின்னர், திரண்டிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

இதனை தொடர்ந்து, 21-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்பு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசினார். இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம், ஜப்பானின் பிரதமர் ஷகெரு இஷிபாவையும் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதேபோன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சானையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், லாவோஸ் பிரதமர் சோனிக்சே ஷிபன்டோனை வியன்டியான் நகரில் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதில், இரண்டு தலைவர்களும் இருதரப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் மோடி, லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் வெளியிட்ட செய்தியொன்றில், இந்த ஆண்டானது, கிழக்காசிய கொள்கையின் ஒரு தசாப்தமாக குறிக்கப்படுகிறது. ஆசியன் தலைவர்களுடன் இணைந்து, நம்முடைய விரிவான மூலோபாய நட்புறவின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வேன். நம்முடைய ஒத்துழைப்புக்கான வருங்கால வழிகாட்டுதலை வடிவமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அவர், கிழக்காசிய உச்சி மாநாடு ஆனது, இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகிய சவால்களை கலந்து ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். பகிரப்பட்ட புத்த மதம் மற்றும் ராமாயண பாரம்பரிய வளங்கள் செறிந்த லாவோ நாடு உள்பட இந்த பகுதியில் அமைந்த நாடுகளுடன் நெருங்கிய கலாசார மற்றும் குடிமக்களுடனான உறவுகளை நாம் பகிர்ந்து இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

Read Entire Article