
திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி டவுன், நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலின் 319-வது ஆனித் தேரோட்டம் வருகிற 8ம்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலி மாநகரம் மற்றும் வெளி மாவட்ட காவல் துறையினர் என சுமார் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருநெல்வேலி மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 Drone Camera, CCTV Camera Vehicle உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலின் உட்புறமும், வெளிபுறமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக குற்றப்பிரிவு காவலர்களைக் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு ரதவீதிகளிலும் இரண்டு உயர் கோபுரங்கள் அமைத்து குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட உள்ளது. கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைக்கப்பட உள்ளன. காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டிய ஏனைய விவரங்களையும் அம்மையங்களில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாநகர கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462-2562651 மற்றும் டவுன் காலம் நிலைய எண் 9498101726-க்கு தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவக்குழு, நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறையின் அறிவுறுத்தல்கள்:
(i) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி கோவிலுக்கு வரும் பதர்களும் பொதுமக்களும் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது. சாதி தலைவர்கள் குறித்து எந்தவிதமான கோஷங்களும் எழுப்பக்கூடாது. இதை மீறுபவர்கள் மீதும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
(ii) தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
(iii) தேரோட்டத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவர்களுக்கென காவல்துறையினரால் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்தி காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து மாற்றம்:
(i) நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
(ii) நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து டவுண் வழியாக மானூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள் ஸ்ரீபுரம், ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன் ரோடு வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுண்ட் ரோடு, வழுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியப்பேரி, ராமையன்பட்டி விலக்கு வழியாக செல்ல வேண்டும்.
மானூர், ஆலங்குளம் மார்க்கம் செல்லும் வாகனங்கள்:
(iii) மானூர் மார்க்கத்தில் இருந்து நெல்லை டவுண் வழியாக சந்திப்பு பேருந்து நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள், பேருந்துகள் ராமையன்பட்டி விலக்கு, குருநாதன் கோவில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.
(iv) புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குளம் மார்க்கமாக தென்காசி, செங்கோட்டை வரை செல்லும் வாகனங்கள், புறநகர் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீபுரம், டவுண் ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன சாலை வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வந்து வழுக்கோடை வழியாக செல்ல வேண்டும்.
தென்காசி மார்க்கம் செல்லும் வாகனங்கள்:
(v தென்காசி மார்க்கத்திலிருத்து புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்து பழையபேட்டை, கண்டியப்பேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி ராமையன்பட்டி விலக்கு, சத்திரம்புதுக்குளம், சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
(vi) தென்காசி மார்க்கத்திலிருந்து நெல்லை சந்திப்பு வரும் நகர பேருந்துகள் பழையபேட்டை, கண்டியப்பேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து வலபுறமாக திரும்பி குருநாதன் கோவில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல ேவண்டும்.
அம்பை, பாபநாசம் செல்லும் வாகனங்கள்:
(vii) புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி மார்க்கமாக அம்பை, பாபநாசம் வரை செல்லும் வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீபுரம், டவுண் ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன் ரோடு வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வந்து பேட்டை வழியாக செல்ல வேண்டும்.
(viii) பாபநாசம், சேரன்மகாதேவி மார்க்கத்திலிருந்து டவுண் வழியாக புதிய பஸ்நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் புறநகர் பேருத்துகள் பேட்டை, கோடீஸ்வரன்நகர், வலுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி ராமையன்பட்டி விலக்கு, சத்திரம்புதுக்குளம் ரோடு, தச்சநல்லூர், வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
(ix) சேரன்மகாதேவி மார்க்கத்திலிருந்து டவுண் வழியாக சந்திப்பு பஸ் நிலையம் செல்லும் நகர பஸ்கள் பேட்டை, கோடீஸ்வரன்நகர், வழுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியப்பேரி சாலை வழியாக ராமையம்பட்டி சாலை சந்திப்பு வந்து வலதுபுறமாக திரும்பி குருநாதன் கோவில் விலக்கு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம்தியேட்டர் சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.
அவசரகால வாகனங்கள் மட்டும்:
(x) டவுண் பகுதிக்குள் வரும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மீட்பு அவசரகால வாகனங்கள் அனைத்தும் சொக்கப்பனை முனை, சத்தியமூர்த்தி தெரு, வ.உ.சி.தெரு மற்றும் குளப்பிறை தெருவை அவசர வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
(xi) மேலும் பாபநாசம் மற்றும் தென்காசி மார்க்கத்தில் இருந்து வரும் அவசர கால வாகனங்கள் அனைத்தும் வழுக்கோடை சந்திப்பு, தொண்டர்சன்னதி, புட்டாரத்தி அம்மன் கோவில் சந்திப்பு, வடக்கு மவுண்ட் சாலை, டவுண் ஆர்ச் போன்றவைகளை அவசர வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.