லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுடன் கைகோர்த்து புது அணி; பாஜ எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பெண்ட்? புதுவை சபாநாயகருக்கு தலைமை அதிரடி உத்தரவு

4 weeks ago 3

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ட்டின் மகனுடன் கைகோர்த்து தனி அணியாக செயல்படும் பாஜ எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ய தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் வாரிய தலைவர் மற்றும் அமைச்சர் பதவி கேட்டு எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் மற்றும் பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர் போர்க்கொடி தூக்கினர். பதவி வழங்கப்படாததால் பாஜ தலைமை மீது அதிருப்தியடைந்துள்ள எம்எல்ஏக்கள், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள 10 தொகுதிகளை குறி வைத்து பணியாற்றி வருகின்றனர்.

இது ஆளும் தேஜ கூட்டணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் முதல்வர் ரங்கசாமி தன்னுடைய அதிருப்தியை பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளார். ஆட்சியை வேண்டுமானால் கலைத்து விடுங்கள், எதற்கும் நான் தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் ஆட்சியை கலைக்கும்படி கூறி வருகின்றனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் அமைச்சர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் சுரானா ஆகியோரை பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது மார்ட்டின் மகன் தலைமையிலான அணியில் பாஜ எம்எல்ஏக்கள் மூவர் இணைந்து செயல்படுவதால் வரும் தேர்தலில் பாஜவை கழற்றிவிட முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து 3 பாஜ எம்எல்ஏக்களின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் செல்வத்துக்கு பாஜ தலைமை அழைப்பு விடுவித்துள்ளது. அவர் உடனடியாக விசாகப்பட்டினம் வழியாக டெல்லி சென்றார். அங்கு அமைப்பு செயலாளர் சந்தோஷை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 3 எம்எல்ஏக்கள் மீதான புகார்கள், நியமன எம்எல்ஏக்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து சந்தோஷ்ஜி கேட்டறிந்தார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சபாநாயகர் செல்வத்திடம் கேட்டபோது, ‘அதிருப்தி எம்எல்ஏக்கள் செயல்பாடுகள் குறித்து பாஜ தலைமையிடம் புகார் சென்றுள்ளது. அவர்கள் மீதான புகார்களின் தன்மை குறித்தும், புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். தனி அணியாக செயல்படும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அறிவுறுத்தும் என கூறியுள்ளார்’ என்றார். இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது, 3 பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக மார்ட்டின் மகன் மற்றும் ஜான்குமார் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவது குறித்து 3 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

The post லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுடன் கைகோர்த்து புது அணி; பாஜ எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பெண்ட்? புதுவை சபாநாயகருக்கு தலைமை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article