மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் கடைசியாக 'ஹீரமண்டி' என்ற வெப் சீரிசை இயக்கி இருந்தார். இதனையடுத்து பன்சாலி, 'லவ் அண்ட் வார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சாவரியா' படத்தை பன்சாலி இயக்கி இருந்தார். இதனையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பன்சாலியுடன் ரன்பீர் கபூர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், 'லவ் அண்ட் வார்' படம் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'சங்கம்' படத்தின் ரீமேக் என்று இணையத்தில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திக்கு இயக்குனர் பன்சாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், '''லவ் அண்ட் வார் ரீமேக் இல்லை. நான் ஏன் சங்கத்தை ரீமேக் செய்ய வேண்டும்?. 'லவ் அண்ட் வார்' திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். கடினமான படமும் கூட. அதனால் நான் கவனமாக இருக்கிறேன்' என்றார்.