சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் 'கனா, எப்.ஐ.ஆர்' படங்களில் இணை இயக்குனர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் 'அன்பு' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அட்டகத்தி தினேஷ் 'கெத்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்தை இன்று வி.சி.க தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் கண்டுகளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "கிராமபுற கிரிக்கெட்டில் சாதி முக்கிய கூறாக இருப்பதனை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதெல்லாம் கசப்பான வெளிச்சத்திற்கு வராத உண்மைகள். கிராமம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இது போன்ற பாகுபாடுகள் கொண்டு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இப்படம் ஆணாதிக்க போக்கையும் வெளிப்படுத்தி உள்ளது. படத்தில் ஆணாதிக்கத்தை நொறுக்கும் வசனம் உள்ளது. சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை காட்டியுள்ளார். காதல் என்பது ஒரு குற்றமில்லை. சாதி, மதம் கடந்து காதல் செய்வதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற விழிப்புணர்வை பெண்கள் பெற்று வருகிறார்கள் என்பதை லப்பர் பந்துவில் வரும் பெண் கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. இது பாராட்டுக்குரிய ஒன்று.
சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு இப்படம் அமைத்துள்ளது. இது வணிக நோக்கில் எடுத்த படமல்ல. இந்த தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல் பாடம்" என்று தெரிவித்துள்ளார்.