
சென்னை,
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த வகையில், பண்ருட்டி பலாப்பழம் உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.