புதுடெல்லி,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டி வரும் 6ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளதை அடுத்து இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் நாக்பூரில் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.