
புதுடெல்லி,
தென்மேற்கு டெல்லியின் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் (Amusement Park)ரோலர் கோஸ்டர் (Roller Coaster) சவாரி செய்த இளம்பெண் ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாணக்கியபுரியைச் சேர்ந்தவர் பிரியங்கா (24 வயது). இவர் நொய்டாவின் செக்டார் 3-ல் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் நஜாப்கரைச் சேர்ந்த நிகில் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரியங்கா, நிகிலுடன் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு இருந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தனர். அப்போது திடீரென ரோலர் கோஸ்டரில் உள்ள சில கம்பிகள் உடைந்ததில் பிரியங்கா ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை நிகில் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு பிரியங்கா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கபாஷேரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேளிக்கை பூங்கா நிர்வாகம் பாதுகாப்பு தரங்களை சரியாக பின்பற்றவில்லை என்று பிரியங்காவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். கேளிக்கை பூங்கா நிர்வாகம் இது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.