லக்னோ: சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு நோட்புக் கொண்டாட்டம் செய்தது மற்றும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, அடுத்த போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், லக்னோ அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் கடும் வார்த்தைகளால் தாக்கிக் கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ அவர்களுக்குத் தண்டனை வழங்கியுள்ளது. திக்வேஷ் ரதிக்கு இது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்றாவது விதிமீறல் என்பதால், அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் ஆடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அதிரடியாக 59 ரன்கள் எடுத்தார்.
அவரது இந்த அதிரடி ஆட்டம் திக்வேஷ் ரதியின் பந்துவீச்சில் முடிவுக்கு வந்தது. அபிஷேக் சர்மா ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோது, திக்வேஷ் ரதி ஒரு புத்தகத்தை எடுத்து, அதில் அபிஷேக் சர்மாவின் பெயரை எழுதுவது போல சைகை செய்தார். இதைக் கண்ட அபிஷேக் சர்மா கோபமடைந்தார். அவர் திக்வேஷ் ரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். பின்னர் லக்னோ அணி வீரர்கள் மற்றும் அம்பயர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் போட்டியின் முடிவில் அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்தாலும், போட்டியில் நடந்துகொண்ட விதத்திற்காக அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அபிஷேக் சர்மா முதன்முறையாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விதிமீறல் செய்திருக்கிறார். அதனால் அவருக்குப் போட்டி சம்பளத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
திக்வேஷ் ரதி இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன நிலையில் தான் எப்போது விக்கெட் எடுத்தாலும் புத்தகத்தை எடுத்து அதை குறித்து வைப்பது போல சைகை செய்து வந்தார். முதல் இரண்டு முறை அவர் எதிரணி பேட்ஸ்மேன்கள் முகத்துக்கு நேராக அதை செய்த போது பிசிசிஐ அபராதம் விதித்தது. அப்போதும் தனது கொண்டாட்ட முறையை மாற்றிக் கொள்ளாத அவர் தொடர்ந்து அதை செய்து வந்தார். அதன் விளைவாகவே அபிஷேக் ஷர்மா கோபம் கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்று இருக்கிறது. தற்போது இருவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் தண்டனை அளித்துள்ளது.
The post லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது ஐபிஎல் நிர்வாகம்..!! appeared first on Dinakaran.