லக்னோ: இந்த ஆண்டிற்கான ஐபில் தொடர் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியின் கேப்டன்களின் பெயர்களை படிப்படியாக அறிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது.
இந்நிலையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ஏலத்தில் ரூ.27 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றார்.
ரிஷப் பண்ட் ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அனுபவத்தை வைத்து லக்னோ அணியை சிறப்பாக வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2022 முதல் விளையாடி வருகிறது. 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் தலைமை தாங்கினார்.
அவரது தலைமையின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் லக்னோ அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது. ஆனால் கடந்த சீசனில் லக்னோ அணி மோசமாக விளையாடியது. மோசமான தோல்விக்கு பிறகு கே.எல். ராகுலிடம், அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கோபத்தை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து கே.எல். ராகுல் லக்னோ அணியில் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதனையடுத்து 2025ம் சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ராகுலை லக்னோ அணி வாங்க முற்படவில்லை. ரூ.14 கோடிக்கு டெல்லி அணியால் கே.எல். ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மொத்தம் உள்ள 10 அணிகளில் 7 அணிகள் தங்கள் கேப்டன்களை அறிவித்துள்ள நிலையில் பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தங்கள் கேப்டன்களை இன்னும் அறிவிக்கவில்லை.
The post லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் appeared first on Dinakaran.