காரைக்கால்: காரைக்காலில் 4 நாட்களாக நட்த மலர் கண்காட்சி நிறைவடைந்தது. இதனை 5 லட்சம் பேர் பார்வையிட்டனர். பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்காலில் புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்னிவல் திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் திருமுருகன், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ நாஜிம், நிரவி திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ நாக தியாகராஜன், திருநள்ளாறு எம்எல்ஏ சிவா, நெடுங்காடு- கோட்டுச்சேரி எம்எல்ஏ சந்திர பிரியங்கா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த திருவிழாவில் பல்வேறு விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, ரேக்ளா ரேஸ், படகுப்போட்டி, நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, மினி மாரத்தான், பீச் வாலிபால், கபடி போட்டி, நாய்கள் கண்காட்சி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாவட்ட வேளாண்துறை மூலம் மலர் கண்காட்சி பிரமாண்ட அளவில் அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் இயக்குநர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட வேளாண்துறை கூடுதல் துணை இயக்குனர் கணேசன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களால் 30,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மலர் கண்காட்சியில் புதுவை மாநில அரசின் சின்னமாக திகழ்கிற புதுச்சேரி ஆயி மண்டபம், தாம்சன் சீட் லெஸ் வகை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திராட்சையால் அலங்கரிக்கப்பட்ட குதிரை தேர், பாகற்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட டைனோசர் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்தது. மேலும் 320 வகையான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூச்செடிகள், 250க்கும் அதிகமான வகையிலான பழச்செடிகள், கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி அளவுக்கு பிரமாண்டமாக மலர் கண்காட்சி அமைந்திருந்தது. இதுபோல உயர்தர நெல் ரகங்கள், பாரம்பரிய ரக நெல்களான காலாநமக், தாய்லாந்து கவுனி, தேங்காய் பூசம்பா, கருப்புக்கவுனி, பாசுமதி உள்ளிட்ட பல்வேறு நெல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மலை காய்கறி, புதியரக காய்கனி கண்டுபிடிப்புள், போன்சாய் மரங்கள், பலவகை உள் அரங்கில் வைக்கும் கேட்டஸ்கள், டிராகன் புரூட், கொடுக்கள்ளி, திருக்கள்ளி, பாம்புகள்ளி என பலவகை கள்ளிச்செடிகள் அனைவரையும் ரசிக்கும் வகையில் காணப்பட்டது. இந்த மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. கடந்த 4 நாட்களாக மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.
The post காரைக்காலில் 4 நாட்கள் நடந்த மலர் கண்காட்சி நிறைவு: 5 லட்சம் பேர் பார்வை appeared first on Dinakaran.