வாடிகன் சிட்டி: ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி வழிகிறது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.போப் பிரான்சிஸ் விருப்பத்தின் பேரில் அவரது உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் 2-வது நாளான நேற்று போப் பிரான்சிஸ் கல்லறையை பொதுமக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது.
அதன்படி ரோம் மட்டுமின்றி இத்தாலி முழுவதிலும் இருந்து ஏராளமானோர் போப் ஆண்டவர் கல்லறையை பார்வையிட்டு வருகிறார்கள்.குறிப்பாக அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பலரும், கல்லறையை பார்வையிட சென்று வருகின்றனர்.இதைப்போல வெளிநாடுகளில் இருந்து சென்று வாடிகனில் தங்கியிருக்கும் பலரும் போப் கல்லறையில் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். ரோஜா பூக்களை கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் புனித மேரி பசிலிக்கா பேராலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பலரும் கண்ணீருடன் போப் ஆண்டவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
The post ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.