செங்கம், மார்ச் 11: செங்கம் வனச்சரகத்தில் ரேஞ்சருக்கு அரசு வழங்கிய கைத்துப்பாக்கியை திருடிய வனகாப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வனச்சரகம் நீப்பத்துறை பகுதியில் வனகாப்பாளராக பணியாற்றி வருபவர் முனியப்பன்(44). இவரது தந்தை அப்பாதுரை இறந்ததன் காரணமாக கருணை அடிப்படையில் முனியப்பனுக்கு இப்பணி வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு பணியாற்றும் ரேஞ்சர் ரகுபதிக்கு அரசு வழங்கிய கைத்துப்பாக்கியை வன அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார். கடந்த 20 நாட்களாக அலுவலகத்தில் இருந்த துப்பாக்கியை சரிபார்த்த போது திடீரென காணவில்லையாம். இதனால் அதிர்ச்சிடைந்த ரேஞ்சர் ரகுபதி சந்தேகத்தின்பேரில் வனகாப்பாளர் முனியப்பனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகம் அடைந்த ரேஞ்சர், அவரிடம் தீவிரமாக விசாரித்தார். அதில், வனகாப்பாளர் முனியப்பன் அந்த கைத்துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று வைத்திருந்தது தெரியவந்தது. உடனே வனஅதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து ரேஞ்சர் ரகுபதி(56) செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வனகாப்பாளர் முனியப்பனை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வன அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ரேஞ்சர் கைத்துப்பாக்கியை திருடிய வனகாப்பாளர் கைது செங்கம் வனச்சரகத்தில் appeared first on Dinakaran.