
பாட்னா,
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ஷியாம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தார். இதனிடையே, அப்பெண்ணின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் கடந்த சில நாட்களுக்குமுன் சொந்த ஊருக்கு வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்து வந்தார்.
இந்நிலையில், அப்பெண் இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள சசமுசா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். உத்தரபிரதேச ரெயிலுக்கு காத்திருந்த அப்பெண் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 3 இளைஞர்கள் அப்பெண்ணின் வாயை பொத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்றனர். பின்னர், ரெயில் நிலையத்திற்கு அருகே மறைவான இடத்தில் வைத்து அந்த பெண்ணை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அப்பெண், தனக்கு நடந்த கொடூரம் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கிராம மக்கள் உதவியுடன் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர்களில் ஒருவனை கைது செய்தனர்.மேலும், 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.