வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி... ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

3 hours ago 2

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் சுப்மன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் தடுமாறி வந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன் எடுத்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். சுப்மன் கில் - பட்லர் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் பட்லர் சிக்சர் மழை பொழிந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களம் புகுந்தார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் மகேஷ் தீக்சனா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-வைபர் சூர்யவன்ஷி களமிறங்கினர். இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. நடப்பு ஐ.பி.எல். சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 14 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இன்றைய ஆட்டத்தில் அவர் 17 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அசத்தினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். இதன் பிறகும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி தொடர்ந்தது. கரீம் ஜனத் வீசிய 10-வது ஓவரில் வைபவ் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

தொடர்ந்து 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீர என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஒரு அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச ரன்களை(87 ரன்கள்) பதிவு செய்துள்ளது

அதே போல் ஐ.பி.எல். வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு பிறகு(30 பந்துகளில் சதம்) அதிவேக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனைக்கும் வைபவ் சொந்தக்காரராகியுள்ளார். தொடர்ந்து 12-வது ஓவரில் பிரசித் பந்துவீச்சில் போல்ட் ஆனபோது ஒருவழியாக வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி நிறைவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் வைபவ் 38 பந்துகளில் 101 ரன்கள் விளாசியுள்ளார். அதோடு இன்றைய ஆட்டத்தின் மூலம் ஒரு அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி தனது அதிகபட்ச ரன்களை(87 ரன்கள்) பதிவு செய்தது.

வைபவ் விக்கெட்டுக்குப் பிறகு களத்திற்கு வந்த நிதிஷ் ராணா, 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக், தனது பங்கிற்கு அதிரடி காட்டி 15 பந்துகளில் 32 ரன்கள்(2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினார்.

மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்த ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ஜெய்ஸ்வால்(70 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் ராஷித் கான் மற்றும் கரீம் ஜனத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Read Entire Article