ரெயிலில் பாலியல் தொல்லை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கிய ரெயில்வே அதிகாரிகள்

3 hours ago 1

சென்னை,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண். இவரும் இவரது கணவரும் தையல் கலைஞர்கள். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதால் அங்கேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண் 2-வது முறையாக கர்ப்பமடைந்ததால் மருத்துவ பரிசோதனைக்காக தன் தாயார் வசிக்கும் சித்தூர் மாவட்டத்துக்கு செல்ல கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு பயணம் செய்தார்.

இந்த ரெயில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் - கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை எதிர்பாராத இளம் பெண் கூச்சலிட சக பயணிகள் அங்கு வந்தனர். அந்த நேரத்தில் அந்த இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு அவர் வேறு பெட்டிக்கு மாறி தப்பினார். பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கே ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரின் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதைதொடர்ந்து, ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான ஹேமராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார். உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த கர்ப்பிணிக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மற்றும் சென்னை ரெயில்வே மருத்துவ அலுவலர்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை நேரில் சந்தித்து ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டு தொகையை வழங்கினர்.

Read Entire Article