![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38277288-untitled-1.webp)
புதுடெல்லி,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகி உள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றியும், 42 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதேபோன்று, ஆம் ஆத்மி 6 இடங்களில் வெற்றியும், 16 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் நிலையில் பிரதமர் மோடி இந்த வெற்றி நல்லாட்சிக்கு கிடைக்கும் வெற்றி என்று கூறிள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜன சக்தியே முதன்மையானது! வளர்ச்சி வெற்றி பெறுகிறது, நல்லாட்சி வெற்றி பெறுகிறது.
பா.ஜ.க.வுக்கு கிடைத்த இந்த மகத்தான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு என் அன்பான டெல்லி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவாகவும், பெருமையாகவும் இருக்கிறோம்.
டெல்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதிலும், அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பது எங்கள் உத்தரவாதம்.
இந்த வெற்றிக்கு வழிவகுத்த, மிகவும் கடினமாக உழைத்த ஒவ்வொரு பா.ஜ.க. காரியகர்த்தாவை நினைத்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இன்னும் தீவிரமாக உழைத்து டெல்லி மக்களுக்கு சேவை செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.