மும்பை,
2010ம் ஆண்டு மே 8ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் வடலா நகரில் இருந்து சின்சுபக்லி நகருக்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நசீர் கான் என்ற இளைஞர் பயணித்தார். ரெயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் படியில் நின்றுகொண்டிருந்த நசீர் கான் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த நசீர் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நசீர் கான் உயிரிழந்தார்.
இதையடுத்து, நசீர் கானின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது பெற்றோர் ரெயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், நசீர் கான் செல்லுபடியாகும் (valid) டிக்கெட்டில் பயணிக்கவில்லை, நசீர் கான் ரெயிலில் இருந்து விழுந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை கூறி இழப்பீடு வழங்க ரெயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயம் 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நசீர் கானின் பெற்றோர் மும்பை ஐகோர்டில் மேல்முறையீடு செய்தனர். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது.
அதன்படி, ரெயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நசீர் கானின் பெற்றோருக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூ. 8 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்திற்குள் வழக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நசீர் கான் மாதாந்திர ரெயில் டிக்கெட் பாஸ் உடன் பயணித்ததாகவும், ரெயில் இருந்து கீழே விழுதததாலேயே அவர் உயிரிழந்ததாகவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதேவேளை, 8 வாரத்திற்குள் ரூ. 8 லட்சம் இழப்பீட்டை ரெயில்வே வழங்கவில்லை என்றால் 7 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டுமென ரெயில்வேக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.