ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலையில்லை: ஒன்றிய நிதி செயலாளர் பேட்டி

2 hours ago 1

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.29 ஆகி சரிந்த நிலையில், ரூபாயின் வீழ்ச்சியை பற்றி கவலைப்பட வேண்டாம், அதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது என ஒன்றிய நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறி உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்ததைத் தொடர்ந்து உலகளாவிய வர்த்தக போர் விரிவடையும் அபாயத்தை தொடங்கியிருக்கிறது.

இதனால், ஏற்கனவே தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 67 பைசா சரிந்து ரூ.87.29 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இது குறித்து ஒன்றிய நிதித்துறை செயலாளர் துஹின் பாண்டே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘ரூபாயின் மதிப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ரூபாயின் ஏற்ற, இறக்கத்தை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. இந்திய ரூபாய் சந்தையில் சுதந்திரமாக செயல்படக் கூடியது.

அதன் மீது எந்த கட்டுப்பாடும், நிலையான மதிப்பையும் நிர்ணயிக்க முடியாது. வெளிநாட்டு மூலதன நிதி தொடர்ந்து வெளியேறுவதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதாலும் ரூபாய் வீழ்ச்சியை சந்திக்கிறது. அதற்கேற்ப ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். பட்ஜெட் குறித்து நிதி செயலாளர் துஹின் பாண்டே கூறுகையில், ‘‘வளர்ச்சி, பணவீக்கம் இரண்டையும் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பட்ஜெட் இது.

இது பொருளாதாரத்தை தேவையான ஊக்கத்தை அளிப்பதோடு, சேமிப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சியின் மூலம் பணவீக்கத்தை குறைக்கவும் வழிவகுக்கக் கூடியது’’ என்றார். ரூபாயின் கட்டுப்பாடற்ற வீழ்ச்சியை தடுக்க தேவையான வகையில் அந்நிய செலவாணி கையிருப்பை ரிசர்வ் வங்கி நிர்வகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விரைவில் ரூ.100 ஆக வீழ்ச்சி அடையும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்துக்கது. நேற்றைய வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 87.17 ஆக இருந்தது.

The post ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலையில்லை: ஒன்றிய நிதி செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article