
முல்தான்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இதில் க்ராவ்லி 78 ரன்னிலும், அடுத்து வந்த பென் டக்கட் அரைசதம் அடித்த நிலையில் 84 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரூட் உடன், ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 101 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 492 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 176 ரன், ஹாரி புரூக் 141 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, அமீர் ஜாமல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். 4வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.