ரூ.64 கோடியில் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மேம்பாடு: அரசாணை வெளியீடு

4 weeks ago 4

சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்த ரூ.64 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்தியாவின் மூன்றாவது பழமையான பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகும். இந்த மருத்துவக் கல்லூரி 1953 முதல் இயங்கி வருகிறது. பல் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றிலும் இக்கல்லூரி சிறந்த மையமாக உள்ளது. இந்த கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, ரூ.56.5 கோடியில் தற்போதுள்ள கட்டிடத்துடன் கூடுதலாக நான்கு தளங்கள் கட்டப்பட உள்ளது. இது ஒரு தளத்திற்கு 33,600 சதுர அடி பரப்பளவை உருவாக்கி, மொத்தமாக 1,34,400 சதுர அடியாக இருக்கும். மேலும் புதிதாக கட்ட இருக்கும் தளங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் 100 புதிய பல் மருத்துவ நாற்காலிகள் 7.59 கோடி ரூபாயில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்திற்கு ரூ.56.5 கோடி மற்றும் உபகரணங்களுக்கு ரூ.7.59 கோடி என மொத்தம் ரூ.64 கோடி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளது. இந்த அனுமதி பல் கட்டும் துறை, வாய்வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம், பல் ஈறு அறுவை சிகிச்சை துறை போன்ற துறைகளையும் வலுப்படுத்தும். கடந்த மூன்றாண்டுகளாக அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வரும் ஆயிரக்கணக்கான பயனாளிகளின் தரமான, பாதுகாப்பான பல் சிகிச்சை மேம்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post ரூ.64 கோடியில் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மேம்பாடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article