வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். ரூ.10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதமும், பெண்கள், ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் அதாவது 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
இது தவிர 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மகசூல் காலங்களில் வேளாண் விளைபொருட்கள் விலை வீழ்ச்சி அடையும்போது விளைபொருட்களை வீணாகாமல் சேமித்து, மதிப்புக்கூட்டி, உழவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதுடன், தக்காளி, மிளகாய், சின்னவெங்காயம், முருங்கை, மஞ்சள், வாழை, மா, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி, உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த மதிப்புக்கூட்டுதல் அலகுகள் அமைக்க வழிவகுக்கப்படும். இவ்வாறான 100 திட்டங்களுக்கு முதற்கட்டமாக இவ்வாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.50 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன், சேலம் மாவட்டம் கொளத்தூர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, கரூர் மாவட்டம் சின்னதாராபுரம், விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு மற்றும் திருவில்லிபுத்தூர், பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மற்றும் தொட்டியம், இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு பரிவர்த்தனைக் கூடங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பரிவர்த்தனைக்கூடம் ஆகியன அமைக்கப்படும்.
அறுவடைக் காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களைப் பாதுகாக்கவும், கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறையில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் கடன் பெறும் வசதியை ஊக்குவிக்க, தொடுவட்டி, திங்கள் சந்தை, திண்டிவனம், செஞ்சி, சூலூர், கும்பகோணம், உடுமலைப்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர், உசிலம்பட்டி ஆகிய ஒன்பது ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தலா 1,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
The post ரூ.50 கோடியில் 100 வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் அலகுகள் appeared first on Dinakaran.