புதுடெல்லி,
டெல்லியில் போதை பொருள் கடத்தல் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மகிபல்பூர் பகுதியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 560 கிலோ கொக்கைன் வகை போதை பொருட்களை 4 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்றது தெரிய வந்தது. மூட்டை மூட்டையாக கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்ட இந்த போதை பொருட்களை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமன்சு குமார், அவுரங்கசீப் சித்திக், பரத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் வசந்த விகார் பகுதியை சேர்ந்தவரான கோயலின் கூட்டாளிகளாக ஹிமன்சுவும், அவுரங்கசீப்பும் செயல்பட்டு வந்துள்ளனர். குர்லா மேற்கு (மும்பை) பகுதியை சேர்ந்த பரத் ஜெயின் என்பவர் இவற்றை வாங்குவதற்காக வந்துள்ளார். அவரும் போலீசில் பிடிபட்டு உள்ளார்.
இந்த வழக்கில் டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். போலீசாரால் பிடிபட்ட முக்கிய புள்ளியான துஷார் கோயல் விசாரணையில் கூறும்போது, 2021-ம் ஆண்டு டெல்லி காங்கிரசின் ஆர்.டி.ஐ. பிரிவின் தலைவராக பதவி வகித்தேன் என்றும் அதன்பின்னர் அதில் இருந்து விலகி விட்டேன் என்றும் கூறியுள்ளார். இதுபற்றியும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் உள்ள அந்நபரின் புகைப்படங்களை போலீசார் தேடி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நபர், டிக்கி கோயல் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் கணக்கு ஒன்றை தொடங்கி பின்னர் அதனை அழித்து விட்டார் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொக்கைன் வகை போதை பொருள் கடத்தலில் துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் அவர் கொக்கைன் போதை பொருட்களை அதிக அளவில் விநியோகிப்பவர் என்பதும் சிறப்பு பிரிவு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு, பிடிபட்ட அதிக அளவிலான போதை பொருள் இதுவாகும் என கூடுதல் காவல் ஆணையாளர் பிரமோத் சிங் குஷ்வஹா கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.