ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

1 month ago 16

தர்மபுரி: ரூ.40 கோடியை அபகரிக்க திட்டமிட்டு தம்பதியை காரில் கடத்தி கொலை செய்த கும்பல், ஒருநாள் முழுவதும் காரிலேயே சடலங்களை வைத்துக் கொண்டு சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், தடங்கம் அருகே வெத்தலகாரன்பள்ளம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள பகுதியில், கடந்த 24ம் தேதி தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் வருமாறு: ஆன்லைன் மூலம் டிரேடிங் வியாபாரம் செய்த இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை, ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கம்பெனியில், முதலீடு செய்த பணத்தில் ₹40 கோடியை சமீபத்தில் இவர்கள் திரும்ப பெற்றனர்.

இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வரும், தேனி ராசிங்கபுரத்தை சேர்ந்த தேவராஜ்(31) என்பவருடன், மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தன்னிடம் உள்ள பணத்தில் தொழில் தொடங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த தேவராஜ், அவரிடம் உள்ள பணத்தை அபகரித்து, சுகபோகமாக வாழ திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தேவராஜ், அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றபோது தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (33) என்பவரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். ஓட்டலில் ேவலை செய்து வரும் கன்னியாகுமரியை சேர்ந்த அஸ்வின், பிரவீன்குமாரின் நண்பர்கள் டிரைவர் சபரி(26), நந்தகுமார்(21) ஆகியோரையும் சேர்த்து செயலில் இறங்கினர். கடந்த 22ம் தேதி மணிகண்டன் மற்றும் ஹேமலதாவை காரில், தேனி ராசிங்கபுரம் கிராமத்துக்கு தேவராஜ் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு பிரவீன்குமார், அஸ்வின், சபரி, நந்தகுமார் ஆகியோர் மற்றொரு காரில் வந்து ஒதுக்குபுறமான இடத்தில் உள்ள வீட்டில் மணிகண்டன், ஹேமலதாவை தங்க வைத்து ₹40 கோடியை கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை தர மறுக்கவே கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து 2 நாட்களாக காரிலேயே உடல்களை வைத்து சுற்றி திரிந்துள்ளனர்.

பின்னர், பிரவீன்குமார் தரப்பினர் தங்கள் காரில் 2 பேரின் உடல்களையும் எடுத்துசென்று 24ம்தேதி தர்மபுரிக்கு வந்து, ஹேமலதாவின் 12 பவுன் நகைளை எடுத்துக்கொண்டு உடல்களை வீசி சென்றுள்ளனர். கார் டிரைவர் சபரி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்ததில் உண்மையை கூறியுள்ளனர். இதையடுத்து தேவராஜ், அஸ்வின், பிரவின்குமார், டிரைவர் சபரி, நந்தகுமார் ஆகிய 5 பேரை நேற்று மாலை, போலீசார் கைது செய்தனர். இதில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த தேவராஜூக்கு காலில் எலும்பு முறிந்ததால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் மாவுகட்டு போடப்பட்டுள்ளது.

The post ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு appeared first on Dinakaran.

Read Entire Article