ரூ.40 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக சென்ற 9 வயது சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

7 hours ago 2

*வாத்து வியாபாரி கைது

திருமலை : ரூ.40 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக சென்ற 9 வயது சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி மாவட்டம், கூடூர் மண்டலம், நெல்லட்டூர் ஊராட்சி, சாவட்டா பழங்குடியினர் காலனியைச் சேர்ந்தவர்கள் அங்கம்மா-செஞ்சய்யா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். டிராக்டர் ஓட்டி குடும்பம் நடத்தி வந்த செஞ்சய்யா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனால் அங்கம்மா தனது 2வது மகன் வெங்கடேஷ்வர்லு (9), மகளுடன் கூலி வேலைக்காக சத்தியவேடு ஊராட்சி தளவாய் அக்ரஹாரத்திற்கு வந்தார். தொடர்ந்து, வாத்து வியாபாரியான முத்துவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

பணியில் இருந்தபோது முன்பணமாக ரூ.40 ஆயிரம் பெற்றார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதை அங்கம்மா நிறுத்திக் கொண்டார். இதனால் முன்பணத்தைத் திருப்பித் தருமாறு வியாபாரி முத்து வற்புறுத்தினார்.

மிகவும் மோசமான குடும்ப சூழ்நிலை காரணத்தால், பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வரை தனது 9 வயது மகன் வெங்கடேஷ்வர்லுவை வாத்து மேய்க்கும் வேலையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறி, தாய் அங்கம்மா சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக தனது மகனிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வராததால், தளவாய் கிராமத்திற்கு சென்று முத்துவிடம் தனது மகன் எங்கே தாய் அங்கம்மா கேட்டார். ஆனால் முத்துவிடம் சரியான பதில் இல்லை. நாட்கள் செல்லச் செல்ல மகனின் எந்தத் தடயமும் இல்லாமல் போனதால், அங்கம்மா சத்யவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முத்துவிடம் விசாரண நடத்தினர். விசாரணையில், ​​சிறுவன் தமிழ்நாடு மாநிலம், செங்கல்பட்டு அருகே உள்ள காஞ்சி கிராம பகுதிக்கு வாத்துகளை மேய்க்க அனுப்பியதாகவும், அங்கு நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வெங்கடேஷ்வர்லு உடல் அந்தப் பகுதியிலேயே புதைக்கப்பட்டதாக வியாபாரி கூறினார்.

இதனால் சத்தியவேடு போலீசார் காஞ்சி கிராமத்திற்கு சென்று அங்குள்ள போலீசாரின் உதவியுடன், சிறுவனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை நேற்று முன்தினம் தோண்டி எலும்புகூட்டைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வாத்து வியாபாரி முத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post ரூ.40 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக சென்ற 9 வயது சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article