மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: ஒன்றிய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

5 hours ago 4

டெல்லி: மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என ஒன்றிய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் இன்று ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ.53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ.52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குத் தானியங்கி வருடாந்திரக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த AT&C இழப்புக் குறைப்பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டிச் செலவினங்கள், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) நிதி நிலையில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இச்சவாலினை எதிர்கொள்ளும் வகையில், தேவை மதிப்பீடு மற்றும் அடுத்த நாள் மின் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினை இக்கழகம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது. மேலும், மாநில அரசு, சுமார் 20,000 மெகாவாட் அளவிலான நீரேற்று நீர்மின் திட்டங்களையும் (Pumped Storage Hydroelectric Projects), மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளையும் (Battery Energy Storage Systems) நிறுவுவதன் மூலம் எரிசக்தி சேமிப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இம்முயற்சிகள், மாநில மின் தொகுப்பில் உபரியாகும் சூரிய சக்தியைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும், உச்ச நேர மின் கொள்முதலுக்கான செலவினங்களைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) நிதி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, மின் கொள்முதல் மற்றும் இதர வழங்குநர்களுக்கான (Suppliers) கொடுப்பனவுகளில் (Payments) இந்நிறுவனம் கடைப்பிடிக்கும் கட்டண ஒழுங்கிலும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. இதன் பயனாக, செலுத்த வேண்டிய நாட்களின் எண்ணிக்கை, முன்னதாக இருந்த 146 நாட்களிலிருந்து, தற்போது நியாயமான அளவில் 48 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இது, தாமதக் கட்டணச் சுமையினையும் (Late Payment Surcharge) மேலும் குறைத்துள்ளது. மேற்கூறிய அனைத்து முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) ஒரு யூனிட்டுக்கான இழப்பு, அதாவது சராசரி வருவாய் தேவைக்கும் (Average Cost of Supply – ACS) சராசரி வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் (Average Revenue Realised – ARR) இடையிலான இடைவெளி (ACS-ARR Gap), ஒரு யூனிட்டுக்கு 8 பைசா என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலச் சவால்கள் மற்றும் தீர்வுகள்:
மேற்கூறப்பட்ட பல்வேறு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அதிவேகமான மின் தேவை வளர்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் புதிய எரிசக்தி மூலங்களில் நிகழும் தொடர்ச்சியான தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியன, நமது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலத்திற்குப் பெரும் சவால்களை முன்வைக்கின்றன. பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும், மின் தொகுப்பினை கரியமிலத் தாக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் (Decarbonisation), இத்துறையில் மிகப்பெரும் அளவிலான முதலீடுகள் இன்றியமையாததாகின்றன. மதிப்பீடுகளின்படி, எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில், மின் உற்பத்தி, மின் செலுத்துகை, மின் சேமிப்பு மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான மதிப்புச் சங்கிலியிலும் சுமார் இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் அவசியமாகின்றன.

இவ்வகையில், மின் பகிர்மான நிறுவனங்களின் (Discoms) நிதிநிலையைச் சீரமைத்து, அவற்றின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் முனைப்பானதும், ஒருமுகப்படுத்தப்பட்டதுமான ஒருங்கிணைந்த பேராதரவு அவசியமாகிறது. மின் பகிர்மான நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கென ஒரு முழுமையான, விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்திட்டத்தினை மாநிலங்கள் முழுமனதுடன் ஏற்றுச் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் பொருட்டு, கடன் பொறுப்பினை ஏற்கும் சுமையை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சமஅளவில் பகிர்ந்தளிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும், மின் பகிர்மான நிறுவனங்களின் நிதிப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் கடன் சுமை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், இத்திட்டமானது உறுதியான நிதிச் சீர்திருத்தங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவது சாலப் பொருந்தும்.

அத்துடன், பதினாறாவது நிதி ஆணையமானது, எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான நமது நாட்டின் பொது நிதி கட்டமைப்பினை இறுதி செய்யும் முக்கியப் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இச்சூழலில், மின்சக்தித் துறைக்கான சிறப்பு நிதியொதுக்கீடுகளின் (Dedicated Grants) இன்றியமையாமையை நாம் அனைவரும் ஒருமித்த குரலில் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.

முக்கிய கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த பரிந்துரைகள்:
1. ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC) மற்றும் மின் நிதி கழகம் (PFC) ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை விழுக்காடு (1.5%) அளவிற்கு குறைக்கப்பட வேண்டும். இந்த ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் பெற்றுவரும் மிகை ஊதிய வரம்பானது (High Spread), இத்துறையின் ஒட்டுமொத்தக் கடன் தாங்குதிறனையும் (Debt Sustainability) நேரடியாகப் பாதிக்கின்றது.
2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மேம்பட்ட செயலாக்கத் திறனையும் வணிக நம்பகத்தன்மையையும் (Improved Viability) கருத்திற்கொண்டு, சில மாநிலங்களின் மீது மட்டும் சமமற்ற நிதிப்பொறுப்பு சுமத்தப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மின்செலுத்தமைப்புக் கட்டணங்களிலிருந்து (Transmission Charges) அளிக்கப்பட்டு வரும் விலக்கினைத் திரும்பப் பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
3. ராய்கர் – புகளூர் – திருச்சூர் உயர் மின்னழுத்த நேர்திசை மின் தொடரமைப்பானது (HVDC Transmission System), தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாகக் கருதப்பட்டு, அதற்கான கட்டண விகிதங்கள் அதற்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும்.

4. மாநிலங்களுக்கிடையேயான மின்செலுத்தமைப்புக் கட்டணங்கள் (Inter-State Transmission Charges), “பயன்படுத்துவோர் செலுத்தும்” (User Pays) எனும் கொள்கையின் அடிப்படையில், உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும்.
5. மின் தேவைக்கான வளத்திட்டமிடலைப் பொறுத்தவரையில் (Resource Adequacy Planning), மதிப்பிடப்பட்ட மின் தேவையை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நீண்டகால மற்றும் நடுத்தரகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் விகிதாச்சாரத்தை வரையறுக்காமல், அந்தந்த மின் பயன்பாட்டு நிறுவனங்கள், தங்களின் தனிப்பட்ட மின்சுமைப் போக்கு (Load Pattern) மற்றும் எதிர்காலத் தேவைக் கணிப்புகளின் அடிப்படையில், உகந்த முறையில் திட்டமிட்டுக் கொள்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

6. புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகள் (Renewable Purchase Obligations – RPO), ஒவ்வொரு குறிப்பிட்ட எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையிலும் வரையறுக்கப்படாமல், மாநிலங்கள், தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதும், தங்களின் பிராந்திய சூழலுக்கு மிகவும் உகந்ததுமான எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இந்த மாநாட்டில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், உடன் பங்கேற்றனர்.

The post மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: ஒன்றிய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article