ரூ.30.29 கோடி மதிப்பீட்டில் 147 அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்: 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்

3 hours ago 1

சென்னை: ரூ.30.29 கோடி மதிப்பில் 147 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவசரகால ஊர்தி சேவைகளை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், 72 புதிய 108 அவசரகால ஊர்திகள்,

மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான 4 புதிய நான்கு சக்கர அவசரகால ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊர்திகள், என மொத்தம் ரூ.29 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரம் செலவில் 143 ஊர்திகளின் சேவைகளையும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசர கால ஊர்திகளின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் வெள்ளைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.30.29 கோடி மதிப்பீட்டில் 147 அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்: 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article