*சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்ணாடி மாளிகைகள் மற்றும் கழிப்பிடங்கள் சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக உள்ளதால் இங்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், குன்னூரில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காக்களுக்கு சென்று மகிழ்கின்றனர்.குறிப்பாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலைத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா மேம்பாட்டிற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஊட்டி தாவரவியல் பூங்காவில் தற்போது பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக பூங்காவில் உள்ள கள்ளிச் செடிகள் வைக்கும் கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டது.தற்போது புகழ் வாந்த பெரணி இல்லம் கண்ணாடி மாளிகையை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த கழிப்பறைகள் நவீன மயமாக்கப்படவுள்ளது.
இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள கழிப்பறைகள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பிடத்தை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மேல் கார்டன் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கழிப்பிடமும் இடிக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளது. இவ்விரு கழிப்பிடங்களும் வரும் கோடை சீசனுக்குள் கட்டி முடிக்கவும் பூங்கா நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், பூங்காவில் உள்ள பசுமைக்குடில்கள், நர்சரிகள் மற்றும் நடைபாதைகளும் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காகவும், அதேசமயம் பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காகவும் தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் தற்போது பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, கள்ளிச்சடிகள் வைக்கும் கண்ணாடி மாளிகை மற்றும் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், பூங்காவில் பழமை வாய்ந்த கழிப்பிடங்கள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூங்காவில் நடைபாதைகள், நர்சரிகள் மற்றும் பசுமை குடில்கள் ஆகியவைகளும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் கோடை சீசன் துவங்கும் முன் முடிக்க வேண்டியுள்ளது. எனவே, தற்போது கட்டுமான பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த கழிப்பிடங்களில் போதுமான வசதிகள் இல்லாமலும், போதிய சுகாதாரமும் இன்றி காட்சியளித்து வந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதன் கட்டுமான பணிகளை பூங்கா நிர்வாகம் துவக்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
The post ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கண்ணாடி மாளிகைகள் சீரமைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.