நெல்லை: இந்தியாவிலேயே மிகப் பெரிய சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை நெல்லை கங்கைகொண்டானில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ரூ3ஆயிரத்து 800 கோடி மதிப்பில் துவங்கியுள்ள இந்த ஆலை மூலம் 4 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பாளை. கேடிசி நகர் ரவுண்டானாவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கைகுலுக்கி அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் வந்த முதல்வருக்கு சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 313 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே மிகப் பெரியதாக, ஒரே இடத்தில் 4.3 ஜிகாவாட் சோலார் பேனல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். டாடா சோலார் நிர்வாக இயக்குநர் பிரவீன் சின்ஹா வரவேற்றார். டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் காணொலி மூலம் உரையாற்றினார்.
தொடர்ந்து ஆலை வளாகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு சோலார் பேனல் உற்பத்தி செய்யப்படும் முறையை பார்வையிட்டார். ஆலை இயங்கும் விதம் குறித்து முதல்வருக்கு விளக்கப்பட்டது. அப்போது அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் திரண்டு முதல்வரை வரவேற்றனர். அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த முதல்வர், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, டிஆர்பி.ராஜா, தொழில்துறை முதன்மை செயலாளர் அருண்ராய், தொழில் ஏற்றுமதி மற்றும் வழிகாட்டி மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலை மூலம் நெல்லை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். நவீன தொழில்நுட்பம், சிறப்பு அம்சங்களை கொண்டு, உயர்ந்த தரம், அதிக உற்பத்தியுடன் இங்கு சோலார் மாடுல்கள் மற்றும் செல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த உற்பத்தியை வரும் காலத்தில் 2 மடங்காக அதிகரிப்போம். இந்த தொழிற்சாலை துவங்குவதற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.40.04 கோடி செலவில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் மற்றும் புதிய வணிக வளாகம், நெல்லை டவுனில் பாரதியார் பள்ளி அருகே ரூ.14.97 கோடியில் நீச்சல் குளத்துடன் கூடிய சிறுவர் விளையாட்டு அரங்கம், ரூ.11.03 கோடியில் டவுன் நயினார்குளம் தெற்கு பகுதி மேம்படுத்தப்பட்டு சிறுவர் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக ரூ.66 கோடியே 4 லட்சம் மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளை பாளை மார்க்கெட் புதிய வணிக வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக பாளை மார்க்கெட்டை திறந்து வைக்க நடந்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்களிடம் கைகுலுக்கி, செல்பி எடுத்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார்.
அப்போது புதுமைப் பெண்கள் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெறும் மாணவிகள், மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் பயன்பெறம் மாணவர்கள் திரண்டு முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பாளை முருகன்குறிச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
* மேலும் சில இடங்களில் தொழிற்சாலை அமைப்பு
விழாவில் பேசிய டாடா சோலார் நிர்வாக இயக்குநர் பிரவீன் சின்ஹா, தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் மிகப் பெரிய தொழிற்சாலையை அமைத்துள்ளோம். இந்த ஆலையில் இருந்து 100 கிமீ பரப்பளவை சுற்றியுள்ள 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதை மிகப் பெரிய வாய்ப்பாகவும், பெருமையாகவும் கருதுகிறோம். அதற்காக அனைத்து வகையான உதவிகளையும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் மேலும் சில இடங்களில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.
* 71 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்த டாடா சோலார் பேனல் தொழிற்சாலையில் பணியாற்றும் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 71 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சைகை மூலம் மொழி பெயர்ப்பாளர் ஸ்டார்வின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர்கள் அனைவரும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பிளஸ் 2, பிஏ, பிஎஸ்சி படித்தவர்கள். மாற்றுத் திறனாளிகளான இவர்கள் முதல்வருக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர். மொத்தம் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* மேலும் ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல்
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா சோலார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிப்காட் வளாகத்தில் ரூ.2,574 கோடி மதிப்பீட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்படும் விக்ரம் சோலார் என்ற புதிய சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.இந்த தொழிற்சாலையின் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உள்ளூரில் வேலைவாய்ப்பு பெண் ஊழியர்கள் வரவேற்பு
டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். ஆலையில் பணியாற்றும் பெண்கள் அளித்த பேட்டி:
* சரஸ்வதி (29): எனது சொந்த ஊர் நெல்லை அருகே தருவை. நான் பிஇ (இசிஇ) பட்டம் பெற்றுள்ளேன். டாடா சோலார் பவர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூரில் வேலைவாய்ப்பு என்பதால் வீட்டிற்கு எளிதாக சென்று வர முடிகிறது. குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள முடிகிறது.
* செல்வஜோதி (35): நான் பிளஸ் 2 படித்துள்ேளன். உள்ளூரில் சிறிய கடை நடத்தி வந்தேன். இங்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த தொழிற்சாலையை இங்கு அமைக்க அனைத்து உதவிகளையும் செய்தததால் தான் பெண்கள் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு சாத்தியமாகி உள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
* முதல்வர் 2 கி.மீ. ரோடு ஷோ: செல்பி எடுத்து மக்கள் மகிழ்ச்சி
வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே சாலையோரம் திரண்டு இருந்து பொதுமக்களைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி பாளை. மார்க்கெட் வரை 2 கி.மீ தூரம் நடந்தே சென்றார்.
அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து முதல்வர் உற்சாகமாக கையசைத்தார். பொதுமக்களும், ஜவுளி நிறுவன ஊழியர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் முதல்வரை பார்த்து கையசைத்து உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அங்கிருந்து நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். முதியவர்களுடன் கை குலுக்கினார். தொண்டர்களின் செல்போன்களை வாங்கி அவர்களுக்காக செல்பி எடுத்துக் கொடுத்தார். இதனால் தொண்டர்கள் மக்களின் முதல்வர் என ஆரவாரம் எழுப்பினர்.
* திமுகவில் இணைந்த பாஜ, அதிமுக நிர்வாகிகள்
பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று பாஜ நெல்லை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தயாசங்கர், முன்னாள் பொதுசெயலாளர் வேல்ஆறுமுகம், மண்டல் முன்னாள் தலைவர்கள் பிரேம், ரவி, இசக்கி ஐயப்பன், நிர்வாகிகள் இசக்கார், மாரியப்பன், சபரிமலை வாசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் நேற்று பாஜவில் இருந்து திமுகவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து இலங்காமணி தலைமையில் 10 பேரும் இணைந்தனர்.
The post ரூ.3 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் தொழிற்சாலை: நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார், 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.