அரக்கோணம்: அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மண்டல தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர், ஓட்டல் நடத்துவதற்காக வீட்டு மின் இணைப்பை, வணிக மின் இணைப்பாக மாற்றக்கோரி அரக்கோணம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால், இணைப்பை மாற்றுவதற்கு உதவி செயற்பொறியாளர் புனிதா ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சரவணன் புகார் செய்யவே, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கடந்த 3ம்தேதி அரக்கோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மேன் பல்கிஸ்பேகம் ஆகியோரிடம் தொடுத்தாராம்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும், உதவி செயற்பொறியாளர் புனிதா வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.1.85 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மேன் பல்கிஸ்பேகம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து, வேலூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நளினி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
The post ரூ.25,000 லஞ்சம் வாங்கி கைது 3 பெண் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.