புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கையெழுத்து இயக்கம்; ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள பேனாவில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் ரங்கசாமி

6 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பலமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஒன்றிய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில அந்தஸ்து கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி, டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து பெற்று ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை வளாகத்திலுள்ள தனது அலுவலகத்தில், இதற்கான கையெழுத்து இயக்க மனுவில் முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்தை போட்டு இயக்கப் பணியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். முன்னதாக, கையெழுத்து போடுவதற்கு முன்பு, முதல்வரின் மேஜையில் அரசு கோப்புகளில் கையெழுத்திடும் பச்சை மை பேனா மட்டுமே இருந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடம் நீல மை பேனா தருமாறு கேட்டார். அப்போது பக்கத்தில் இருந்த வழக்கறிஞர் ராம் முனுசாமி தனது பேனாவை முதல்வரிடம் கொடுத்தார்.

பேனாவை வாங்கிய முதல்வர் ரங்கசாமி, வித்தியாசமாக இருந்த பேனாவை பார்த்து, இது எந்த ஊர் பேனா? என கேட்டார். அதற்கு அவர், ஜெர்மன் நாட்டு பேனா. இதன் விலை ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 600 என கூறினார். ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனாவா? என சிரித்தபடியே கூறி முதல் கையெழுத்தை அந்த பேனாவில் பதிவிட்டார்.

The post புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கையெழுத்து இயக்கம்; ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள பேனாவில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Read Entire Article