மீ ரத், ரலி சவுகன் கிராமத்தைச் சேர்ந்த சோனிகா என்னும் ஏழை பெண் இன்று அந்த மொத்தக் கிராமத்துக்கும் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார். தனது கிராமத்துப் பெண்கள் அத்தனைப் பேருக்கும் சோனிகாதான் இன்று ரோல் மாடல். அப்படி சொற்ப முதலீட்டில் துவங்கிய சோனிகாவின் துடைப்பங்கள் பிசினஸ் மற்றவர்கள் வீட்டுக் குப்பைகளை மட்டும் அல்ல சோனிகாவின் வீட்டு வறுமையையும் துடைத்திருக்கிறது. சோனிகாவின் கணவர் பெயின்டர் வேலை செய்பவர். அதிலும் தொடர் சம்பாத்தியம் இல்லாமல், பல நாட்கள் வேலை இல்லாமல் குடும்பம் வறுமையால் வாடியிருக்கிறது. இதில் அடுத்த வேளை உணவுக்கே கணவன், மனைவி இருவரும் அல்லாடியிருக்கிறார்கள். குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு கூட கொடுக்க இயலாமல் குடும்பமே வறுமையின் பிடியில் சிக்கித் தவித்திருக்கிறது. இந்நிலையில்தான் மீரட்டின், ஜெயில் ஜுங்கி சாலையில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (Canara Bank Rural Self Employment Training Institute (RSETI)) கொடுத்த இலவச துடைப்பம் பயிற்சியில் கலந்துகொண்டு முதலில் சோனிகாவின் கணவர் பயிற்சி பெற்றிருக்கிறார். பின்னர் சோனிகாவும் பயிற்சி பெற்றதன் விளைவாக துவக்கத்தில் கணவருக்கு வேலை இல்லாத சமயத்தில் இந்த துடைப்பங்களை தயாரித்து விற்கலாம் என முடிவு செய்திருக்கிறார் சோனிகா. ஆனால் நாளடைவில் இதில் வரும் வருமானத்தினால் முழு குடும்பமும் இந்தத் துடைப்பம்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
‘ரூ.25,000 கடனாகத்தான் பெற்று மூலப்பொருட்கள் வாங்கி துடைப்பங்கள் உருவாக்கினோம். ஆரம்பத்தில் நானும் என் குழந்தைகளும்தான் துடைப்பங்கள் செய்வோம். அருகாமையில் இருக்கும் கடைகளில் துடைப்பங்கள் விற்பனைக்குக் கொடுக்க ஆர்டர்கள் அதிகரிக்கத் துவங்கியது. தொடர்ந்து என் ஒருத்தியால் அத்தனை துடைப்பங்களை சொன்ன நேரத்தில் டெலிவரி கொடுக்க இயலவில்லை. எனவே எங்களுடன் என் கணவரும் இணைந்தார். பிறகு மொத்தமாகவே குடும்பமாக இந்தத் துடைப்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தோம். நாளுக்கு நாள் ஆர்டர்கள் அதிகரித்தன. ஒரு கடை துவங்கி இன்னொரு கடை என வாய்வழியாக எங்களின் கைகளால் செய்யப்பட்ட துடைப்பங்கள் குறித்த செய்தி பரவத் துவங்க நிறைய ஆர்டர்கள் டன் கணக்கில் வர ஆரம்பித்தது. நாங்கள் இருவர் மற்றும் குழந்தைகள் மட்டும் போதாது என்பது புரிந்து அருகாமையில் இருப்போரையும் எங்கள் தொழிலில் சேர்த்துக் கொண்டோம்’. என்னும்சோனிகா அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கும் ரூ. 800 முதல் ரூ. 1000 என்கிற ரீதியில் சம்பளம் கொடுத்து பணியாளர்களாக அமர்த்தியிருக்கிறார். ‘மூலப்பொருட்கள் செலவு, பணியாளார்கள் கூலி எல்லாம் போக மாதம் ரூ. 50,000 வரை இதில் வருமானம் வருகிறது. இப்போது என் கணவரும் முன்பு போல் பெயின்டிங் வேலைகள் செய்வதில்லை. குடும்ப வறுமையால் மன அழுத்தத்தில் இருந்தும் மீண்டு விட்டார். தீபாவளி சமயத்தில் பலரின் ஆர்டர்களை முழுமைப் படுத்த முடியாத அளவுக்கு நாங்கள் தவிக்கும் அளவுக்குச் சென்றது. மிகப்பெரிய சந்தோஷம் எங்களது துடைப்பங்கள் இப்போது பெரிய பெரிய சரக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு டெல்லி வரை செல்கிறது. என் கணவர் முழுமையாக வியாபாரம் மற்றும் மார்கெட்டிங் வேலைகளை செய்து வருகிறார். என்னுடைய மேற்பார்வையில் பலரும் எங்களுடன் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்’ முகம் மலர சோனிகாக் கூற‘எங்களைப் பார்த்து பலரும் சிரித்தனர்’ என்கிறார் சோனிகாவின் கணவர் சோனு குமார்.
‘போயும் போயும் துடைப்பமா?’ என என் நண்பர்களும், எங்கள் அக்கம் பக்கத்து வீட்டார்களும் ஏளனமாக சிரித்தனர். எதையும் நாங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. எங்களின் குடும்ப பிசினஸ் இது, இதுதான் எங்களுக்கு சோறு போடுகிறது என்பதை மட்டும் மனதில் ஏற்றிக் கொண்டு உண்மையாக உழைத்தோம். ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் எங்களைப் பார்த்து சிரித்த ஒரு சிலர் இன்று எங்களிடம் சம்பளத்துக்காக வேலை செய்கிறார்கள். அவர்களையும் கூட எந்த வகையிலும் நாங்கள் இடையூறு செய்யாமல் சம்பளம் கொடுத்து இணைத்துக் கொண்டோம்’ வட இந்தியாவின் பல மாநிலங்கள், ஊர்களுக்கு இன்று சோனிகாவின் துடைப்பங்கள் ஏற்றுமதியாகின்றன.இதுகுறித்து கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மாதுரி கூறுகையில், ஒரு ஆறு நாட்கள் இலவச பயிற்சிதான் நாங்கள் கொடுத்தோம். ஆனால் சோனிகாவுக்குள் இருந்த தன்னம்பிக்கை அவரை தனித்துவமாக சிந்திக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் இது போலவே பல சுயதொழில் பயிற்சிகள் இலவசமாகக் கொடுக்கிறோம். ஆனால் சோனிகா போல் யாரும் இத்தனை ஈடுபாடு கொடுத்து அதில் வருமானம் ஈட்டுவதில்லை. ஒவ்வொருத்தரும் இப்படி யோசித்தாலே வறுமை இல்லா தேசத்தை உருவாக்க முடியும். தற்போது எங்களின் பயிற்சிக் குழுவுடன் சோனிகாவும் இணைந்திருக்கிறார். அவரது பிசினஸ் நேரம் போக எங்களுடைய பயிற்சி மையத்தில் ஒரு பயிற்சியாளராக தன் கதையை எடுத்துக்காட்டாகக் கொண்டே வரும் வருடங்களில் பயிற்சிகள் கொடுக்க இருக்கிறார் சோனிகா’ என்கிறார் மாதுரி.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதிச் சுதந்திரம் மிக அவசியம். ஆனால் அது அவ்வளவு சுலபமாகக் கிடைக்காது. சோனிகா போன்ற ஒரு கிராமத்துப் பெண் முன்னேறி லட்சத்தில் வருமானம் ஈட்டுவது என்பது கிட்டத்தட்ட ஒரு போருக்கு சமம். சுற்றியிருப்பவர்கள் ‘மனைவி சம்பாத்தியத்தில் இப்படி சாப்பிடுகிறாயே?’ என நகைக்கும் போது கணவர் சோனுவோ, ‘இப்படி துடைப்பம் விற்று சம்பாதிக்கிறீர்களே?’ என சிரிக்கும் போது சோனிகாவோ கொஞ்சம் பின்வாங்கியிருந்தாலும் இந்த வெற்றி சாத்தியப் பட்டிருக்காது. அனைத்தையும் கடந்து இன்று ஒரு பெண் தொழில் முனைவோராக முன்னேறி அவரைப் போலவே பல பெண்களுக்கு பயிற்சிகளும், உத்வேகமும் கொடுத்து வருகிறார் சோனிகா. மாற்றம் என்பது நமக்குள் உண்டாவதுதான் முதல் வெற்றி.
– ஷாலினி நியூட்டன்
The post ரூ.25,000 முதலீடு… 12 லட்சம் வருமானம்… சாதித்த கிராமத்துப் பெண்! appeared first on Dinakaran.