ரூ.21 லட்சத்தை விடுவிக்க லஞ்சம் பழநி கோயில் பொறியாளர் கைது

2 months ago 9

பழநி: ரூ.21 லட்சத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கிய பழநி கோயில் பொறியாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (49). அரசு ஒப்பந்ததாரர். கடந்த 2023ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ரூ.71 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரை செந்தில்குமார் எடுத்துள்ளார். பணிகள் செய்து 2 கட்டமாக பணம் பெற்றுள்ளார். இறுதி கட்டமாக ரூ.21 லட்சம் தர வேண்டி உள்ளது.

இத்தொகையை விடுவிக்க பழநி கோயிலின் கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமார் (50) ரூ.18,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.18,000 நோட்டுகளை கொடுத்துள்ளனர். நேற்று செந்தில்குமார் மப்டி போலீஸ் ஒருவருடன் பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் பிரேம்குமாரை சந்தித்து அவரது மேஜையில் லஞ்ச பணத்தை வைத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரேம்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

* கோயில் வளாகத்தில் 7 மணிநேரம் பரபரப்பு
பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் பிரேம்குமாரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு துறையினர் பகல் 12 மணியளவில் நுழைந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது நடைமுறைகள் குறித்த ஆவணம் தயாரிக்க மாலை 6 மணியளவில் டைப் ரைட்டிங் மிஷினை அலுவலகத்திற்குள் எடுத்து சென்றனர். தொடர்ந்து கைது ஆவணம் தயார் செய்த பின்பு அதில், திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய கோயில் இணை ஆணையரிடம் கையெழுத்து பெற்றனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் கைதான பிரேம் குமாரை மெடிக்கல் செக்கப்பிற்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். லஞ்சம் வாங்கி கைதான நபரால் பழநி கோயில் அலுவலகத்தில் சுமார் 7 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

The post ரூ.21 லட்சத்தை விடுவிக்க லஞ்சம் பழநி கோயில் பொறியாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article