
தோகா:
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. முழுமையான போர்நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்தும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது,
அதன்படி போர் நிறுத்தம் ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வந்தது. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இரு தரப்பிலும் உள்ள கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் எட்டு பேரின் சடலங்கள் உள்பட 33 பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கு ஈடாக கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. முதற்கட்ட போர்நிறுத்தம் கடந்த 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.
அதன்பின்னர் போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்துவது குறித்து கத்தார் தலைநகர் தோகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான திட்டத்தை மத்தியஸ்தர்கள் முன்மொழிந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக்கைதி ஒருவரையும், தங்கள் பிடியில் இருந்தபோது இறந்துபோன 4 இரட்டை குடியுரிமை பணயக்கைதிகளின் உடல்களையும் விடுவிப்பதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இஸ்ரேலிய ராணுவ வீரர் ஈடன் அலெக்சாண்டர் விடுவிக்கப்படுவார் என்றும், 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்போது ஒப்படைக்கப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை.