
போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஸ்ரத்தா தாஸ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் இஷிதா சாகு (22). பள்ளிகாலம் தொடங்கி இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரத்தா தாஸ் இஷிதாவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இரவு ஸ்ரத்தாவை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இஷிதா நேரில் வந்தார். ஆச்சரிய பரிசு ஒன்றை அளிக்க விரும்புவதாக கூறியதை நம்பி ஸ்ரத்தா வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது இஷிதா தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை ஸ்ரத்தா மீது வீசினார்.
முகம், உடல் கருகி ஸ்ரத்தா வலியில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஸ்ரத்தாவின் பெற்றோர் அங்கு வந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 50 சதவீதம் தீக்காயங்களுடன் ஸ்ரத்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இஷிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.