சென்னை: ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பால்வளம் 2025 – 2026ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை;
ரூ. 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1,437 பால் பகுபாய்வு கருவிகள் நிறுவப்படும்.
மாவட்ட ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் கலப்படமற்ற தரமான பால் கொள்முதல் செய்திடும் வகையில் தரப்பரிசோதனை மேற்கொண்டு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதால் உறுப்பினர்கள் வழங்கும் தரமான பாலுக்கு அதிக விலை கிடைப்பதுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு சங்கத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படும். இதனால் உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு தரமான பால் வழங்குவது ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் 1437 சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்கள் பயன்பெறுவர். இதற்கு தேவையான கிளவுட் பால் பகுப்பாய்வு கருவிகள் ரூ.934 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD) & ஒன்றிய சொந்த நிதி பங்களிப்புடன் கொள்முதல் செய்யப்பட்டு சங்கங்களில் நிறுவப்படும்.
ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் பாலில் கலப்படத்தை கண்டறியவும் 129 நவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவுகள் வழங்கப்படும்.
தரமான பால் கொள்முதல் செய்வதை மேம்படுத்துவதற்கும் மற்றும் பால் பரிசோதனை வசதிகளை வலுப்படுத்தும் விதமாகவும் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம். நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 129 தொகுப்பு பால் குளிர்விப்பான்களுக்கு தேவையான அதிநவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு முறை (FTIR) தொழில்நுட்பத்துடன் கூடிய பாலில் கலப்படம் கண்டறியும் கருவிகள் ரூ.645 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
இதன் மூலம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் தரமான பால் கொள்முதல் செய்வது உறுதிப்படுத்தப்படுவதோடு பாலில் கலப்படம் தடுக்கப்பட்டு நுகர்வோருக்கு தரமான பால் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.
ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும்.
ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையின்றி ஆவின் பால் உபபொருட்கள் கிடைக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இணையம் மற்றும் 27 ஒன்றியங்கள் மூலமாக புதியதாக 500 ஆவின் பாலகங்கள் முகவர்கள் மூலமாக தொடங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன பெட்டி, உறைகலன், ஆவின் பெயர் பலகை மற்றும் விளம்பரம் சார்ந்த பொருட்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தித்தரப்படும். இதனால் தரமான ஆவின் பொருட்கள் நுகர்வோருக்கு எளிதில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது 3.79 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களின் கறவை இனங்களை பராமரித்து பாதுகாக்க தேவையான இடுபொருட்கள் கொள்முதல், மருத்துவச் செலவு மேற்கொள்ளுதல், கறவை கொட்டகை அமைத்தல் ஆகியவற்றிற்கு உதவும் வகையில் கால்நடை பராமரிப்புக் கடன் (KCC-AH) பெற்று வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இதர வங்கிகள் மூலமாக ரூ.2000 கோடி மதிப்பீட்டில் கறவை இனங்களுக்கான பராமரிப்புக் கடன் (KCC -AH) பெற்று வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்
ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் 14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்.
காஞ்சிபுரம் – திருவள்ளூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஒன்றியங்களில் பயன்பாட்டில் இருந்து தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள அதிக மின் செலவை ஏற்படுத்தும் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்களுக்கு பதிலாக புதிய தொகுப்பு பால் குளிர்விப்பு கலன்கள் ரூ.240 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் மின் சேமிப்பு, பால் குளிர்விப்புத் திறன்மற்றும் பாலின் தரம் உயரும்.
ரூ. 1.50 கோடி மதிப்பீட்டின் தரமான பால் கொள்முதல் செய்ய தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கெடாதவண்ணம் பாதுகாக்க தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பால் தொகுப்பு குளிர்விப்பான்களில் சேமிப்பு செய்யப்படும் பாலின் தரத்தை பரிசோதிக்கும் விதமாகவும் தரத்திற்கேற்ப விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிடுவதை உறுதி செய்திடும் விதமாகவும் பால் பரிசோதனை கருவிகள் ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து 165 பால் தொகுப்பு குளிர்விப்பான்களுக்கு வழங்கப்படும்.
இதனால் கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, மதுரை. தேனி, திண்டுக்கல். திருச்சி, தஞ்சாவூர். புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த 2130 கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.
ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் மாதாவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பால் மற்றும் பால் பொருட்களை கையாளும் பால் பண்ணைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை, தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களுக்கான (NABL Accreditation) தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (FSSAI) தரத்திற்கு ஈடான ஆய்வகத்தில் பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் பால் மற்றும் பால் பொருட்களின் பரிசோதனையின் முடிவுகளை உயர்ந்த தரத்திற்கு உறுதிப்படுத்த முடியும். இதன் மூலம் நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் வழங்க இயலும்.
இதன் அடிப்படையில் மாதவரத்தில் அமைந்துள்ள மாநில மைய ஆய்வகத்தை NABL Accreditation மற்றும் FSSAI தரத்திற்கு உயர்த்தும் பொருட்டு தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD) மற்றும் இணைய பங்களிப்புடன் ரூ.223 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும்.
ரூ. 2.63 கோடி மதிப்பீட்டில் 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள கணக்கு பதிவேடுகள் மற்றும் இதர பதிவேடுகளை எளிதாக பராமரிக்கவும் தணிக்கைக்குத் தேவையான பதிவேடுகளை ஒருமித்த மாதிரி பதிவேடுகளாக பராமரிக்கவும் 525 சங்கங்களை கணினிமயமாக்குவதற்கு தேவையான கணினி ரூ. 263 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இவ்வாறு கணினி மயமாக்கப்படுவதால் கூட்டுறவுச்சங்கங்களில் பணித்திறன் மேம்படும். இதன் மூலம் கடலூர், திருப்பத்தூர், தருமபுரி. கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி, கரூர். சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பயன்பெறும். இதற்கு உண்டான நிதி தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (NPDD) & ஒன்றிய சொந்த நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன விதைகள் வழங்கப்படும்.
கறவை மாடு பராமரிப்பில் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு அவசியமாகிறது. கோடை காலங்களில் வறட்சிநிலவுவதால் பசுந்தீவன உற்பத்தி குறைகிறது. எனவே விவசாயிகள் அதிக விலை கொடுத்து தீவன புல் வாங்குவதால் பால் உற்பத்தி செலவினம் கூடுகிறது.
இதனை ஈடுசெய்யும் பொருட்டு அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.72 இலட்சம் மதிப்பீட்டில் சான்றளிக்கப்பட்ட பசுந்தீவன விதைகள் வழங்கப்பட்டு 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் திட்டம் தேசிய கால்நடை இயக்கம் (NLM). நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்
ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
ஆவினில் இயங்கும் பயிற்சி நிலையங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கும், சங்க பணியாளர்களுக்கும் மற்றும் பால் பண்ணைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் தேவையான வெவ்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம், வேலூர் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் மாதவரத்தில் அமைந்துள்ள இணையத்தின் திறன் மேம்பாட்டு மையம் ஆகிய இடங்களில் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளான பயிற்சி அறை, தளவாட சாமான்கள், பயிற்சி உபகரணங்கள், பயிற்சியாளர்கள் தங்கும் அறைக்கான வசதிகள் மற்றும் உணவு கூட வசதிகள் ரூ.238 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
ரூ. 1.94 கோடி செலவில் உம்பளச்சேரி இன பசுமாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நாகப்பட்டினம் பகுதியில் காணப்படும் உம்பளாச்சேரி நாட்டின மாடுகளை பாதுகாத்து பால் உற்பத்தியை பெருக்கிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பால் அளவு தரவுகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் பால் உற்பத்திக்கான உயரிய மரபணு பண்புகளை கொண்டுள்ள சிறந்த பசுக்கள் தேர்வு செய்யப்படும். பின்னர் இப்பசுக்களை கொண்டு மரபு ரீதியாக அதிக பால் கறக்கும் திறனுடைய உம்பளாச்சேரி இன மாடுகள் உருவாக்கப்படும். தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் ரூ.194 இலட்சம் செலவில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும்.
பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. சங்கங்களை மின் ஆளுமையின் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நோக்கில் 58 பால் நுகர்வோர்கள் கூட்டுறவுச் சங்க கணக்குகளை கணினிமயமாக்குதல் இன்றியமையாததாகிறது.
தற்போது பால் நுகர்வோர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கணக்குகள் கையால் எழுதப்படுவதால். காலவிரயம் ஏற்படுவதுடன், கூட்டுறவுத் தணிக்கைக்கு கணக்குகளை சமர்ப்பிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும்போது. பால் நுகர்வோர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் தினசரி வியாபார நடவடிக்கைகள் முற்றிலுமாக கணினிமயமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்கு உண்டான திட்ட மதிப்பீடு ரூ.58 இலட்சம் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி / கூட்டுறவு கல்வி நிதி மூலம் செயல்படுத்தப்படும்.
ரூ. 60 லட்சம் மதிப்பீட்டின் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
புதியதாக பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் குறித்த அறிவியல் சார்ந்த வளர்ப்பு முறைகள். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகளின் உற்பத்தி திறன் குறித்து விழிப்புணர்வு அளிப்பது அவசியமாகிறது. எனவே அதனை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி கறவை மாடு வளர்ப்பில் நிலைத்தன்மையை இத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
மேலும், மாவட்ட ஒன்றியங்களில் பால் கொள்முதலை அதிகரிக்கும் விதமாக கூட்டுறவு அமைப்பிலிருந்து வெளியே சென்ற உற்பத்தியாளர்கள், தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கி வந்த உற்பத்தியாளர்கள் மற்றும் புதியதாக கூட்டுறவு வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 12000 பால் உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பால் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்தும் வகையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “காண்பது நம்புதலாகும்” என்ற அடிப்படையில் பால் கறக்கும் போட்டி நடத்தப்படும்.
பால் உற்பத்தியாளர்களிடையே ஒரே மாதிரியான சூழலில் வளர்க்கப்படும் கலப்பின ஜெர்சி / ப்ரிசியன் இன கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறன் சமமாக இருக்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பால் உற்பத்தியாளர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் செயல்படுத்திவரும் பால் உற்பத்தி தொழில் நடைமுறைகளை முறையாக அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு உத்திகளை பரிமாறிக் கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
எனவே, அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிக பால் கறவை செய்யும் சிறந்த மூன்று கறவை மாடுகளை தேர்ந்தெடுத்து அதன் உற்பத்தியாளர்கள் கௌரவிக்கப்படுவர்.
ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு கறவை மாடுகளின் பராமரிப்பு, இனப்பெருக்கம், செயற்கை முறை கருவூட்டல், பகுக்கப்பட்ட உறை விந்து, கருமாற்ற தொழில்நுட்பம், சினை தருண ஒருங்கிணைப்பு மற்றும் குறைந்த செலவில் அதிக பால் உற்பத்தியை பெருக்கும் உத்திகள் ஆகியவற்றில் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள், அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் / பயிற்சியாளர்களை கொண்டு வழங்கிட ஏதுவாக கருத்தரங்கு கூட்டங்கள் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும்.
பால் மற்றும் பால் உபபொருட்களை உறைகலன்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் மூலம் விநியோகம் செய்வதால் விற்பனை முகவர்கள் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து விற்பனை சந்தை மேலும் விரிவடையும்.
ஆவின் பதப்படுத்தப்பட்ட பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு சரியான தரத்தில் வழங்க விற்பனை முகவர்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்களின் குளிர்சாதன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 600 எண்ணிக்கையிலான உறைகலன்கள் (Deep Freezer) மற்றும் குளிர்சாதன பெட்டிகள் (Bottle cooler) ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
தற்பொழுது மாநிலத்தில் அரசு உறைவிந்து நிலையங்களை தவிர பல தனியார் உறைவிந்து நிலையங்களில் தயாரிக்கப்படும் உறைவிந்து குச்சிகள் அதிக அளவில் கிடைப்பதால் ஆவின் மூலம் செயல்படும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே. செயற்கை முறை கருவூட்டல் பணிகளை விரிவுபடுத்துவதன் அவசியம் கருதி செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களிடையே கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவில் ஆவின் உறைவிந்து குச்சிகளை கொள்முதல் செய்து அதிகப்படியான கறவைகள் சினைப்பிடிக்கும் விகிதத்தில் திறமையாக பணி செய்யக்கூடிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் மடி நோய் கண்டறியும் பொருட்கள் 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
அதிக பால் கறக்கும் கறவை மாடுகளில் மடிநோய் தாக்கம் தற்போது வரை பெரும் சவாலாக இருந்து வருகிறது.மடிநோய் என்பது கறவை மாடுகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இந்நோயால் பால் உற்பத்தி பெரும் அளவில் குறைவது மட்டுமல்லாமல் பால் மடி முழுமையாக செயல் இழந்து போகும் அபாயமும் உள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை உண்டாக்குகிறது.
எனவே, மடிநோயை அதன் அறிகுறிகள் தெரியும் முன்பே கண்டறிந்து நோய் தொற்று பரவாமல் பாதுகாத்திட, மிக குறைந்த செலவில் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் 100 மடி நோய் பரிசோதனை முகாம்கள் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
பால் உற்பத்தி செய்யும் கறவை மாடுகள் வருடத்திற்கு ஒரு கன்று ஈன வேண்டும் என்ற அடிப்படையில் கால்நடைகள் வளர்க்கப்படும் போது வருடந்தோறும் அதிகபடியான பால் உற்பத்தியாவதால் பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் மேம்படும். பொதுவாக கன்று ஈனும் இடைவெளி 18 முதல் 24 மாதங்கள் ஆகிறது. எனவே பால் வற்றிய காலத்தில் கால்நடை பராமரிப்பிற்கு ஏற்படும் செலவினத்தை குறைக்கும் பொருட்டு, சினைக்கு வராத மாடுகளுக்கு தகுந்த மலடு நீக்க சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து வழங்குவதன் மூலம் வருடம் ஒரு கன்று ஈனுவதை உறுதி செய்யலாம். இதற்காக அனைத்து ஒன்றியங்களிலும் மொத்தம் 2000 மலடு நீக்க சிகிச்சை முகாம்கள் மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் “வெண் நிதி” திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் நிலமற்ற வேளாண் மக்களாக இருப்பதால் அவர்களின் அவசர தேவைகளுக்கு பிணையற்ற கடன் வசதி ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகிறது. ஆகவே அவர்கள் சார்ந்துள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நுண்கடன் வழங்குவதால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.
பால் உற்பத்தியாளர்களின் தேவைகளான கறவை மாடுகள் பராமரிப்பு, கன்றுகள் கொள்முதல், அவசர மருத்துவசிகிச்சை,கறவை கூடம் பராமரித்தல், பால் கறவை இயந்திரம் கொள்முதல் செய்தல் போன்றவற்றிற்கு எளிய முறை கடன் வசதி ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களை வட்டி கடன் சுமையில் விழாமல் தடுப்பதுடன் சங்கத்திற்கு கூடுதல் வருவாய்க்கு வழிவகை செய்தல் மற்றும் கால்நடை பராமரிப்பு செலவுகளுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய பணிகளால் ஊரக பொருளாதாரம் மேம்படும்.
ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் “ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி” உருவாக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனை முகவர்களின் நலன் கருதி ஆவின் விற்பனை முகவர்கள் நலநிதி உருவாக்கப்படும்.
விற்பனை முகவர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் விற்பனை முகவர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஆவின் விற்பனை முகவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவர்களின் குடும்பத்திற்கு சமூக பாதுகாப்பு மற்றும் நிதியுதவி கிடைக்கும்.
தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
பொதுமக்களின் விருப்பம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு புதிய வகையான மதிப்பு கூட்டப்பட்ட பால் உப பொருட்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. எனவே, தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் (NDRI), உணவு தொழில்நுட்பகல்விநிறுவனம் (CFTRI) மற்றும் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் (IIFPT) தஞ்சாவூர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிய பால் உப பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் ஆவின் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து விற்பனையாளர்களுக்கு கூடுதல் வருவாயும், நுகர்வோர்களுக்கு தரமான பால் உப பொருட்களும் கிடைக்கப்பெறும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் நிதி நிலையினை மேம்படுத்தவும் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக செயல்படுத்தப்படும்.
இச்சங்கங்கள் தற்போது மேற்கொள்ளும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை பணிகளுடன் நுண்கடன் வழங்குதல் மற்றும் கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை ஆகியவற்றை விற்பனை செய்யவும், தேசிய விதைகள் கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து வகை பொருட்களையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் மையங்களாகவும் மற்றும் அரசின் பல்வேறு திட்டப்பயன்களை பெற்றுத் தரும் மின்னணு சேவை மையங்களாகவும் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
The post ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.