ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

3 months ago 19

சேலம்: ரெய்டுக்கு வராமல் இருக்க விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த சேலம் மேற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனம் பதிவு, வாகனம் புதுப் பிப்பு போன்ற பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கடந்த 25ம் தேதி மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.26 லட்சமும், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.30 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி மீதும், மேட்டூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீனாகுமாரி, போட்டோகிராபர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சதாசிவம் (58), கடந்த 10 நாட்களாக விடுமுறையில் இருந்துவிட்டு நேற்று தான் பணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதால், இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரவிக்குமாரை சந்தித்து, தங்கள் அலுவலகத்தில் ேசாதனைக்கு வராவிட்டால் ரூ.1 லட்சம் பணத்தை லஞ்சமாக தருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜியிடம் புகாரளித்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே சதாசிவம் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக சதாசிவத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கே மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் லஞ்சம் கொடுத்து கைதான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article