திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 143 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சாமு நாசர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.ஜி.இராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமா மகேஸ்வரி நகர மன்ற தலைவர் உதயமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் 143 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகளையும், 20 பயனாளிகளுக்கு ரூ.1,33,800 மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு ரூ.72,800 மதிப்பில் இலவச சலவை பெட்டியும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.18,46,472 மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளும், பிரதான் மந்திரி அனுசுசி த்ஜாதி அபியுதாப் யோஜ்னா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும், தமிழ்நாடு தூய்மை பணியாளராக பணிபுரிவோர் 3 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.27.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,67,920 மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு சான்றிதழ்களும்,
மகளிர் திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 5 பயனாளிகளுக்கு ரூ.2,39,760 மதிப்பில் பயிர் கடனும், வேளாண்மை துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,63,713 மதிப்பில் நுண்ணீர் பாசன நலத்திட்டமும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.20,82,800 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும்,
வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.18,33,904 மதிப்பில் பவர் டில்லரும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணன் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் உதவிகளும், மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வு துறை சார்பில் மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு 2 குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் மறுவாழ்வு நிதியும், முன்னோடி வங்கி சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கறவை மாடு கடன் உதவியும்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.65520 மதிப்பில் இலவச சலவை பெட்டியும் ஆக மொத்தம் 143 பயனாளிகளுக்கு ரூ.1,87,90,889 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். இதனை தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் கலாவதி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: 143 பயனாளிகளுக்கு அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.