வேலாயுதம்பாளையம்: நொய்யல் ஆற்றுக்கரையில் கருவேல மரங்களால் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பசுமையை இழந்தது. பழமையான நொய்யல் ஆற்று ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரம் – நாணல் புல்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு;
தமிழகத்தில் பருவ மழையை மட்டுமே நம்பி நமக்கு ஆறுகள் என்பது இயற்கை தந்த கொடையாகும். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தை சங்க கால தமிழன் அணை கட்டி தடுத்து ஏரி, குளங்களை வெட்டி விவ சாயத்திற்குபயன் படுத்தினான்.இதனால் ஆற்றங்கரையோ ரம் நாகரிகம் உருவாகி மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை செழித்து வளர்ந்தன. ஆனால், இன்றைய மனிதன், மணல் அள்ளும் ஆசை யால் ஆறு, ஏரி, குளம்,மலை என்று அனைத்தையும் அழித்து வருகிறோம்.
அந்த வகையில் தமிழகத்தில் ‘இறந்த நதி” என்று அழைக்கப் படும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது காஞ்சிமா நதி என்று அழைக்கப்பட்ட நொய்யல் ஆறு. இது மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலையின் கிழக்கு சரிவில் இருந்தும், வெள்ளியங்கிரி மலை சரிவுகளில் இருந்தும் வரும் ஓடைகள் ஒன்றாக சங்கமிப்பதாக நொய்யல் ஆறு உருவாகிறது. இது கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக 180 கி.மீ. கிழக்கு நோக்கி பயணித்து கரூர் மாவட்டம் நொய்யல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. கொங்கு பெருவழியில் அமைந்து, தான் பாய்ந்த இடத்தையெல்லாம் பசுமையாக்கியதால் இதன் கரையில் கொடுமணல் என்ற சங்ககால வணிகநகரம் உருவானது. இன்றுவரை சான்று உள்ளது.
மேலும் தன் இரு கரைகளிலும் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பசுமையாக்கி வந்தது.
அதேபோல் இந்த ஆற்றில் மழைக்காலத்தில் அதிகளவு வெள்ளம் ஏற்பட்டு காவிரியில் கலந்து வந்தது. இந்த மழைநீரை பயன்படுத்தி கரூர்மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதற்காக ஒரத்துப்பாளையம் மற்றும் ஆத்துப்பாளையம் என்று 2 இடங்களில் அணைகளுடன் நொய்யல் பாசன கால் வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இப்படி 30 ஆயிரம் ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கக்கூடிய நொய்யல் ஆறு இன்று மணல் இழந்து மாசுபட்டு கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறியுள்ளது. நொய்யல் ஆற்றுப் பாசம் என்பது மிகவும் வறண்ட பூமிகள் ஆன குப்பம், புன்னம் சத்திரம், ஆண்டி செட்டி பாளையம், மற்றும் கே.பரமத்திற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதியாகும்.
தமிழகத்தில் மனிதன் பேராசையால் ஒரு நதி சாகடிக்கப்பட்டது என்றால், அது நொய்யல் ஆறுதான். 40 ஆண்டுகளுக்கு முன்புவரை வெண் மணல் பரவி இருந்த ஆற்றின் தரை, இன்று மணல் முழுவதுமாக அள்ளப்பட்டதால் களிமண் நிரம்பி கட்டாந்தரையாக மாறியுள்ளது. இதனால் நொய்யல் ஆறு, இன்று கருவேல முள்மரமும், நாணல் புற்களும் நிறைந்த தோப்பாக மாறி உள்ளது. இதனால் அகன்று விரிந்த ஆற்றின் கரைப்பகுதி கருங்கி குறுகி கிடப்பதால் ஓடை போல் மாறி, கோவை மற்றும் திருப்பூரின் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்கள், சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள், கெமிக்கல் நிறுவனங்கள் ஆகிய தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் மாசுபட்ட தண்ணீரை சுமந்து செல்லும் வடிகாலாக உள்ளது.
இதனால் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு பளிங்கு போல் நல்ல தண்ணீர் ஓடிய நொய்யல் ஆறு தன் நதிக் குரிய அனைத்து சிறப்புகளையும் இழந்ததால் இதன் மூலம் பாசனம் பெற்ற 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங் கள் பசுமை இழந்து பாலை வனமாக மாறிக் கிடக்கிறது. எனவே நொய்யல் ஆற்றுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட ஆற்றில் முளைத்துள்ள கருவேல மரங்களையும், நாணல் புற்களையும் அகற்றி தூய்மைப்படுத்தவும், அதன் கரைகளை அகலப்படுத்தி மீண்டும் நல்ல தண்ணீர் ஓடவும், இந்த ஆற்றை நம்பியுள்ள விளை நிலங்களையும், விவசாயிகளையும் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது பருவமழை முடிந்து ஆறுகளில் மிகவும் குறைவான அளவில் நீர் வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நல்ல நேரத்தை பயன்படுத்தி தற்போது ஆறுகளில் உள்ள சீமை கருவேலம் மரங்கள், நாணல் புல்கள் மற்றும் பிற கழிவுகள் அகற்றுவதற்கு சூழ்நிலை இருப்பதால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தமிழக மின்சாரத்துறை அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ எடுத்துக்கூறி நொய்யல் ஆற்றின் இரு கரையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் நாணல் புல்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நொய்யல் ஆற்று கரையில் கருவேலமரங்கள் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பசுமை இழந்து பாதிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.