ரூ.1.37 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 months ago 21

சென்னை: மெரினா கடற்கரையில் ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து, நீச்சல் வீரர்கள் மெரினா நீச்சல் குளத்தை பயன்படுத்த தொடங்கினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டாக்டர் கோவி.செழியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், இணை ஆணையாளர் ஜெ.விஜயா ராணி, மத்திய வட்டார ஆணையர் (பொறுப்பு) கட்டா ரவி தேஜா, மாமன்ற ஆளும்கட்சித் துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (எ) தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மெரினா நீச்சல் குளமானது, 1942ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடை மாற்றும் அறைகளை பழுதுபார்த்து மேம்படுத்துதல், போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படும். இதில் 10 உயிர் பாதுகாவலர்கள், 8 தூய்மைப் பணியாளர்கள், 10 சுத்தம் செய்யும் பணியாளர்கள், 2 கண்காணிப்பாளர்கள், 6 பாதுகாவலர்கள், 2 எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் என மொத்தம் 38 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.

 

The post ரூ.1.37 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article