ரூ.1.34 கோடி முத்திரைத்தாள் கட்டண பதிவில் மோசடி மாவட்ட பதிவாளர் வீட்டில் 6 மணி நேரம் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

1 week ago 2

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் ரூ. 1.34 கோடி முத்திரை தாள் கட்டண பதிவில் மோசடி எழுந்த நிலையில், பதிவாளர் வீட்டில் 6 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். இவர் 2020ம் ஆண்டு செங்கல்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தார்.‌ தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றியபோது முத்திரை தாள் கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1 கோடியே 34 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், படப்பை பகுதியில் உள்ள ரூ.180 கோடி மற்றும் ரூ.132 கோடி மதிப்புள்ள இரு நிலங்களை ெசங்கல்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதற்காக ஆவணங்களை திருத்தியுள்ளார். சட்டவிரோதமாகவும் பதிவு செய்துள்ளார். இதற்காக செந்தூர்பாண்டியன் மற்றும் அவரது உதவியாளராக இருந்த ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து பல லட்சங்களை மாமூலாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் வந்தனர்.

அவரது வீட்டிற்குள் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் செந்தூர்பாண்டின் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில் அவர்களின் உறவினர்கள் மட்டுமே இருந்துள்ளனர். உறவினர்களின் முன்னிலையில் வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான குடோன் ஒன்றும் உள்ளது.

அந்த குடோனின் சாவி வீட்டில் இல்லாததால் அதில் ஏதாவது ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த குடோனை திறந்து சோதனை செய்தனர். வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல வெளி ஆட்கள் யாரும் வீட்டிற்கு வருவதற்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதிக்கவில்லை. சோதனையின் முடிவில் எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், காலை தொடங்கி மாலை வரை சுமார் 6 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், திருப்பத்தூரில் அவர் தங்கியிருந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை முன்கூட்டியே கசிய விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தும்போதே அவர் உஷார் ஆகிவிட்டாராம். இதனால் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விட்டாராம். இதனால்தான் அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், செந்தூர்பாண்டியன், மாவட்ட பதிவாளர் சங்கத் தலைவராக உள்ளதால், அவரது வீட்டில் நடந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.1.34 கோடி முத்திரைத்தாள் கட்டண பதிவில் மோசடி மாவட்ட பதிவாளர் வீட்டில் 6 மணி நேரம் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article