
சென்னை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்துக்கு 'ஆண்பாவம் பொல்லாதது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவன பெயரில் 'வேடிக்காரன்பட்டி' எஸ். சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். காதல் திரைக்கதை பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் இன்றைய கால இளைஞர்களை கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரியோராஜ் மண்டைக்குள் பல பெண்கள் சித்திரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.